ஆனால், தலைமை தேர்தல் அதிகாரி 13 மாவட்டங்களில் உள்ள 15 மக்களவை தொகுதிகளில் 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியிருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், இதுகுறித்து அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறுகிறார். 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எந்த அடிப்படையில் முடிவெடுத்தார் என்பதை விளக்க வேண்டும். ஆனால் தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிபட்டியில் 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று தி.மு.க. வேட்பாளர் கோரியதற்கு இதுவரை தேர்தல் ஆணையம் எந்த பதிலும் கூறவில்லை. ஆனால், எந்த அரசியல் கட்சியும் கோராத நிலையில் 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த மிகமிக ரகசியமாக தமிழக தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன் ? இதற்குப் பின்னால் இருக்கும் உள்நோக்கம் என்ன ? இதுகுறித்து உரிய விளக்கத்தை தலைமை தேர்தல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.