அரக்கோணத்தில் புதை சாக்கடைத் திட்டம் பலன் தருமா?
அரக்கோணம் நகராட்சியில் கடந்த 2015-ஆம் ஆண்டில் ரூ.95.51 கோடியில் தொடங்கப்பட்ட புதைசாக்கடை திட்டப்பணிகள், 4 ஆண்டுகள் கழித்து தற்போது பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளன. அடுத்த சில மாதங்களில்


அரக்கோணம் நகராட்சியில் கடந்த 2015-ஆம் ஆண்டில் ரூ.95.51 கோடியில் தொடங்கப்பட்ட புதைசாக்கடை திட்டப்பணிகள், 4 ஆண்டுகள் கழித்து தற்போது பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளன. அடுத்த சில மாதங்களில் செயல்பாட்டில் வர உள்ள இத்திட்டம் உத்தேசித்தபடி பலன் தருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக நகராட்சிகளில் புதைசாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு கடந்த 2013இல் முயற்சி மேற்கொண்டது. அப்போது இத்திட்டத்தின் கீழ், அரக்கோணம் நகராட்சியும் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடன் ரூ.95.51 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த 2014 ஜனவரியில் மாநில அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து இத்திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய புதைசாக்கடைத் திட்ட கோட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான பணி உத்தரவுகள் 2014 டிசம்பர் மாதம் அளிக்கப்பட்ட நிலையில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், திட்டப் பணிகளை ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியை 2015 ஏப்ரலில் தொடங்கினர். இப்பணியை 2017 ஏப்ரல் மாதத்குள் முடிக்க வேண்டும் என அப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்காக அரக்கோணம் நகரில் 69 கி.மீ. தூரத்திற்கு கழிவுநீர் விநியோகக் குழாய்கள், 2784 ஆள்நுழைவுப் பள்ளங்கள், 11,104 இணைப்புகள், 13.48 கி.மீ. தூரத்திற்கு கழிவுநீர் உந்துதல் குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின. மேலும் சில்வர்பேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது.
இதையடுத்து, முதன்மை கழிவுநீர் சேகரிப்பு நிலையம் காலிவாரிக் கண்டிகையிலும், துணை கழிவுநீர் சேகரிப்பு நிலையங்களை காமராஜ்நகர், சோமசுந்தரம் நகர் ஆகிய இரு இடங்களிலும் அமைக்கும் பணிகள் தொடங்கின.
ஜெய்பீம்நகர், விண்டர்பேட்டை, அன்னைநகர், காந்திநகர் ஆகிய நான்கு இடங்களில் கழிவுநீர் உந்துதல் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் துவங்கின.
நகரில் பல்வேறு கட்டங்களாக பணிகள் நடைபெற்ற நிலையில் சோமசுந்தரநகர், ஜெய்பீம்நகர் ஆகிய இடங்களில் கழிவுநீர் சேகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீர் உந்துதல் நிலையம் கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி நிர்வாகம் அவர்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து 2017-ஆம் ஆண்டின் இறுதியில் இரு இடங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவுக்கு வந்துள்ளன.
தற்போது அரக்கோணம் நகரில் புதைசாக்கடை திட்டப்பணிகள் 99 சதவீதம் முடிவுக்கு வந்துவிட்டதாக விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய புதை சாக்கடை கோட்ட தலைமையகம் அறிவித்துள்ளது. காமராஜ்நகர், சோமசுந்தரம்நகர், காலிவாரிக் கண்டிகை கழிவுநீர் சேகரிப்பு நிலையங்களில் சோதனை இயக்க நடவடிக்கைகள் முடிந்து அவை இயங்குவதற்குத் தயார்நிலையில் உள்ளன. இதற்கிடையில் இத்திட்டத்தின் இறுதிக்கட்டப் பணியான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின் இணைப்பு தருவதற்கு தமிழ்நாடு மின்வாரியத்தினர் தாமதப்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்த இணைப்பு கிடைத்த மறுநாள் அங்கு சுத்திகரிப்பு பணிகள் தொடங்கும் என்றும் அதற்கு அந்த நிலையம் தயாராக உள்ளது என்றும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
வரும் ஜூன் முதல் வாரத்தில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு, அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு தர வேண்டியது முக்கியமாகும். இப்பணிக்காக வைப்புத்தொகை, கழிவுநீர் அகற்று கட்டணம் ஆகியவற்றை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. இதற்காக உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு நகராட்சி இயக்குநர் அலுவலகத்திற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே அனுப்பப்பட்டும் அதற்கான ஒப்புதல் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால் பணிகள் முடிவடைந்த நிலையிலும் புதை சாக்கடைத் திட்டம் செயல்பாட்டுக்கு வர மேலும் தாமதமாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வேலூர் மாநகராட்சி, திருவள்ளூர் நகராட்சி ஆகிய பகுதிகளில் புதைசாக்கடைத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த இரு நகரங்களிலும் புதைசாக்கடை திட்டம் அமலுக்கு வந்தபோதிலும் தரைமேல் உள்ள சாக்கடைகள் பல இடங்களில் அகற்றப்படாமல் உள்ளன.
இரு நகரங்களிலும் இத்திட்டத்தின் மூலம் கழிவுநீர் வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று ஆலோசனைக் கூட்டங்களில் பல்வேறு தரப்பினரும் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அரக்கோணத்தில் இத்திட்டம் சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் புதைசாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்த வார்டுகளில் சாலை மறுசீரமைப்புப் பணிகள் தற்போது மூன்று கட்டங்களாக தொடங்கியுள்ளன. 2016-17, 2017-18, 2018-19 என மூன்று கட்டங்களாக திட்டம் தீட்டப்பட்டு, 2016-17 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வார்டு சாலை சீரமைப்புப்பணிகள் தற்போது முடியும் கட்டத்தை எட்டியுள்ளன.
இதையடுத்து அடுத்த இரண்டு திட்டப்பணிகளை தொடங்க வேண்டியுள்ளது. இப்பணிகளையும் தீவிரப்படுத்தி ஒரே நேரத்தில் புதைசாக்கடைத் திட்டத்தில் மீதமுள்ள பணிகளையும் தொடங்கி ஓராண்டு காலத்தில் முடிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
வார்டுகளில் சாலை அமைக்கும் பணிகள் முடிவடையாத நிலையில் பலர் பள்ளமான சாலைகளில் வாகனங்களில் சென்று விபத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது.
இத்திட்டத்தை தமிழ்நாடு நகராட்சி இயக்குநரகமும், மண்டல நகராட்சிகளின் இயக்குநரகமும் மேற்பார்வையிட்டு, பொதுமக்களுக்கு சரியான முறையில் அர்ப்பணித்து, நகரில் சாலைகளை விரைவாக அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...