சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மேலவளவு கொலை: முன்கூட்டியே விடுதலையான 13 குற்றவாளிகளும் சமூகத்துக்கு முக்கியமானவர்களா? நீதிமன்றம் காட்டம்

மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சித் தலைவர் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனது கடும் கண்டனத்தைப


மதுரை: மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சித் தலைவர் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

மேலவளவில் 7 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டைனை விதிக்கப்பட்ட 13 பேரை விடுதலை செய்து பிறப்பித்த அரசாணை நகல் வழங்கக்கோரும் மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று விசாரித்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தனர். அதுமட்டுமல்லாமல், அரசு தரப்பு வழக்குரைஞரிடம் சரமாரியாகக் கேள்விகளையும் எழுப்பினர்.

மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சித் தலைவர் உட்பட 7 பேர் கடந்த 1997ம் ஆண்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கடந்த வாரம் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.

13 பேர் முன்கூட்டியே விடுதலைக்கான அரசாணை மற்றும் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலையானது வருத்தமளிக்கிறது.

இவ்வாறு கடும் குற்றச்சாட்டுக்கு உள்ளான வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிப்பது சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகாரிக்கும் நிலையை ஏற்படுத்தும்.

மனித உயிர் மற்ற எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. 13 குற்றவாளிகளும் இவ்வாறு அவசரமாக விடுதலை செய்ய காரணம் என்ன? தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அடிப்படையில் 13 பேரும் விடுதலையாகியுள்ளனர். அரசாணை கூட இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இவ்வளவு வேகமாக 13 பேரையும் விடுதலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? அந்த 13 பேரும் சமூகத்துக்கு மிகவும் முக்கியமானவர்களா? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

மேலும், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கிலும் இதுபோன்ற நிலையே நீடித்தது என்றும் தங்களது வருத்தத்தை கிளை நீதிபதிகள் பதிவு செய்தனர்.

வழக்கின் பின்னணி: மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் உள்ளிட்ட 7 போ் 1997 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டனா். இது தொடா்பாக 17 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவா்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், தண்டனை பெற்ற 17 பேரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 3 பேரும், எம்.ஜி.ஆா். பிறந்தநாளை முன்னிட்டு 13 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனா்.

இந்நிலையில், 13 போ் விடுதலை செய்யப்பட்டதை எதிா்த்து வழக்குரைஞா் ரத்தினவேல், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், மதுரை மாவட்டம் மேலவளவில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடா்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எதன் அடிப்படையில் 13 போ் விடுதலை செய்யப்பட்டனா் என்பது தெரியவில்லை. எனவே, விடுதலை செய்யப்பட்டதற்கான அரசாணையின் நகலை வழங்க உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com