மதுக்கடைகளின் எண்ணிக்கை, வணிக நேரத்தை குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை மற்றும் வணிக நேரத்தை குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை மற்றும் வணிக நேரத்தை குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக கடந்த மே மாதம் பொறுப்பேற்ற ஜகன்மோகன்ரெட்டி, அம்மாநிலத்தின் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகளின் முதல்கட்டமாக ஆந்திரத்தில் அனைத்து மதுக்கடைகளையும் அரசுடைமையாக்கியுள்ள  அம்மாநில அரசு, 880 மதுக்கடைகளை செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் மூடியுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதியான நேற்று முதல் 3500 மதுக்கடைகள் மட்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரத்தில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மொத்தம் 12 மணி நேரம் மதுக்கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், இனி காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 9.00 மணி மட்டுமே மது வணிகம் நடைபெறும் என்றும் ஆந்திர மாநில அரசு அறிவித்து, செயல்படுத்தியிருக்கிறது.

ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அந்த மாநிலத்தின் முழு மதுவிலக்கு கனவு  அடுத்த 4 ஆண்டுகளில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்திலும் இதே போன்று தான் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவை விட ஆந்திரத்தில் தனிநபர் மது பயன்பாடு அதிகம் என்ற போதிலும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அம்மாநில அரசு துணிச்சலாக  திட்டம் வகுத்து செயல்படுத்தத் தொடங்கியிருப்பது  இலக்கை நோக்கிய தெளிவான பயணமாகவே தோன்றுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையும், மது விற்பனையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 6720 ஆக இருந்த மதுக்கடைகள் இப்போது 5198 ஆக குறைக்கப்பட்டுள்ளன. மது விற்பனை நேரமும் 12 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்காக  அதிமுக அரசின் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த 10 கோரிக்கைகளின் படிப்படியாக மதுவிலக்கை  ஏற்படுத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள தமிழக அரசு, மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.

எனவே, படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்  நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக குறைந்தது 500 மதுக்கடைகளை மூடவும், விற்பனை நேரத்தை   நண்பகல் 12.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை என்ற அளவில் குறைக்கவும் அரசு முன்வர வேண்டும். அத்துடன் மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்களை ஒட்டுமொத்தமாக மூட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தி, ஒரு சொட்டு மது கூட இல்லாத, மகிழ்ச்சியான தமிழகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com