அப்போது அண்ணா சாலையில் முரசொலி அலுவலகம் எதிரில்தான் பள்ளிக்கூடம் இருந்தது. எனவே, அங்கே சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து 'அட்மிசன்' எல்லாம் வாங்கி சேர்த்துவிட்டார்கள். அப்படி, சேர்ந்தப் பிறகு முதன்முதலில் நான் பள்ளிக்கூடத்திற்குபோகும் போது, அந்தப் பள்ளியின் தாளாளர் [கரெஸ்பாண்டன்ட்] முரசொலி மாறன் அவர்களிடத்தில், "இவர்கள் இரண்டு பேரையும் இப்போதே சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், ஸ்டாலின் என்ற பெயரை மட்டும் கொஞ்சம் மாற்றி விடுங்கள். ஏனென்றால், இரஷ்யாவில் அந்தப் பெயரால் மிகவும் பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது. அங்கு அவரது சிலைகளையெல்லாம் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கிறிஸ்துவ பள்ளிக்கூடமாக இருக்கிறது. எங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடும். எனவே, இந்த பெயரை மட்டும் மாற்றிவிடுங்கள்", என்று சொல்லியிருக்கிறார்.