இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழ்நாட்டில் மரங்களை பாதுகாக்க மரங்கள் ஆணையத்தை ஏற்படுத்துக: ராமதாஸ் வேண்டுகோள் 

தமிழ்நாட்டில் மரங்களை பாதுகாக்க மரங்கள் ஆணையத்தை ஏற்படுத்துக என்று அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
பாமக நிறுவனர் ராமதாஸ்
Updated On :31 ஜனவரி 2024, 10:08 am

DIN

சென்னை: தமிழ்நாட்டில் மரங்களை பாதுகாக்க மரங்கள் ஆணையத்தை ஏற்படுத்துக என்று அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் அனுமதியில்லாமல் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும், மரங்களை பாதுகாப்பதற்கும்   மரங்கள் சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அறிவுறுத்தியுள்ளது. மரங்களை மட்டுமின்றி, மரங்களின் வழியாக பொதுமக்களையும் பாதுகாக்க மரங்கள் சட்டம் அவசியம் என்பதால் உயர்நீதிமன்றத்தின் இந்த யோசனை வரவேற்கத்தக்கது.

மதுரையில் நெடுஞ்சாலை பாலம் அமைப்பதற்காக 80-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ட நிலையில், மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் மரங்களை வெட்டி வீழ்த்துவதை விட, அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடங்களில் நடலாம் என்று அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், மரங்களை பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டாலாவது அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்கவும் வழி பிறக்காதா? என்ற வினாவை ஏக்கத்துடன் எழுப்பியுள்ளனர்.

மரங்கள் ஆணையம் அமைப்பதற்காக தமிழ்நாடு மரங்கள் பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை  தமிழக சட்டப்பேரவையில் இயற்ற வேண்டும். அந்த சட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும். மரங்கள் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, தமிழகத்தின் எந்த பகுதியிலும், எந்த பணிக்காகவும் மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்றால், அதற்கான அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் மரங்கள் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த கோரிக்கையை ஆய்வு செய்யும் மரங்கள் ஆணையம், கள ஆய்வு மேற்கொண்டு தவிர்க்க முடியாத தேவை இருந்தால் மட்டுமே மரங்களை வெட்ட அனுமதி அளிக்கும். அவ்வாறு அனுமதி அளிக்கும் பட்சத்தில் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக எவ்வளவு மரக்கன்றுகள் எந்தெந்த பகுதிகளில் நடப்பட வேண்டும் என்பது குறித்தும் மரங்கள் ஆணையம் ஆணை பிறப்பிக்கும்; அந்த ஆணைப்படி புதிதாக மரங்கள் நடப்படுவதையும் ஆணையம் கண்காணிக்கும். இதன்மூலம் மரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், தமிழகத்தின் பசுமைப்பரப்பும் விரிவுபடுத்தப்படும். மொத்தத்தில் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விஷயத்தில் மரங்கள் ஆணையம் மிகப்பெரிய கவசமாக திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே, மரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்கள் சட்டத்தை விரைந்து  நிறைவேற்றுவதுடன், அதை செயல்படுத்த மரங்கள் ஆணையத்தையும் தமிழக அரசு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.