எந்த தைரியத்தில் தேர்தல் அறிக்கையில் சில திட்டங்களை அறிவித்தேன்?: ஸ்டாலின் விளக்கம் 

எந்த தைரியத்தில் தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய அறிவிப்புகளை, திட்டங்களை அறிவித்தேன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
எந்த தைரியத்தில் தேர்தல் அறிக்கையில் சில திட்டங்களை அறிவித்தேன்?: ஸ்டாலின் விளக்கம் 

சேலம்: எந்த தைரியத்தில் தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய அறிவிப்புகளை, திட்டங்களை அறிவித்தேன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், வெள்ளியன்று சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதன் விவரம் பின்வருமாறு:

இந்தியாவின் இளம் தலைவர் திரு ராகுல் காந்தி என்று அழைப்பதை விட இந்தியாவின் பிரதமராக வரவிருக்கும் திரு ராகுல் காந்தி என்று அழைப்பதுதான் இப்பொழுது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன். காரணம் யாரும் சொல்ல முன்வராத அவருடைய பெயரை அந்தப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று, முதன்முதலில் தமிழகத்தின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராகுல் அவர்கள்தான் பிரதமர் என்று அறிவித்தவன் நான். எனவே, அந்த உணர்வோடு நான் உங்களிடத்தில் நின்று நம்முடைய வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள வந்திருக்கின்றேன்.

நான் என்றைக்கு இந்த நாட்டின் பிரதமராக திரு ராகுல்காந்தி அவர்கள் வந்திட வேண்டும் என்று முன் மொழிந்தேனோ, அது இன்றைக்கு எந்த அளவிற்கு வந்திருக்கின்றது என்பதற்கு, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இந்தியா முழுவதும் ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை இப்பொழுது தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய ஊடகங்கள் இன்றைக்கு அதை வழிமொழியக்கூடிய நிலையில் அவர்களும் சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய காட்சியை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

எனவே, நம்முடைய வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. நேரு குடும்பத்தின் வாரிசாக வந்திருக்கின்றீர்கள், நீடித்த நல்ல ஆட்சியை தர வேண்டும். இந்திரா காந்தியின் பேரனாக நீங்கள் இங்கு வந்து இருக்கின்றீர்கள். கடந்த ஐந்து வருடமாக இந்த நாட்டு மக்கள் இந்த ஆட்சியால் பல்வேறு கொடுமைகளை சகித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய இந்த மக்களை நாம் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். எனவே, ராகுல் காந்தி அவர்களே நீங்கள் அண்மையில் உங்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றீர்கள். அந்தத் தேர்தல் அறிக்கை வெளியிட்ட உடன், நான் நினைத்தது என்னவென்று கேட்டால் உடனடியாக டெல்லிக்கு பறந்து வந்து உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்ல வேண்டும், உங்களுக்கு மாலை அணிவித்து பாராட்ட வேண்டும் என்று நான் கருதினேன். அதற்கு என்ன காரணம் என்னவென்று கேட்டால், திராவிட இயக்கத்தின் எண்ணங்களை அப்படியே நீங்கள் அந்த தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்து இருக்கின்றீர்கள், அதற்காகத்தான் சொல்கின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பொழுது, சில விமர்சனங்கள் வந்தன. சில கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள். மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய அறிவிப்புகளை, திட்டங்களை எப்படி மாநிலத்தில் இருக்கக்கூடிய ஒரு கட்சி சொல்லலாம்? ஸ்டாலின் என்ன பிரதமராக வர போகின்றாரா? என்றெல்லாம் விமர்சனம் செய்த ஒரு சூழ்நிலை இருந்தது. இது எனக்கு தெரியாதா?

மத்தியில் நாம் கை காட்டக்கூடிய ஆட்சிதான் வரப்போகின்றது. ராகுல் காந்தி அவர்கள் தான் பிரதமராக வந்து அமரப் போகிறார். எனவே, அந்த தைரியத்தில், அந்த நம்பிக்கையில் தான் தேர்தல் அறிக்கையில் அவைகள் எல்லாவற்றையும் இன்றைக்கு சேர்த்து வெளியிட்டிருக்கின்றோம்.

தமிழகத்தில் ஒரு கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. மத்தியில் ஒரு அசிங்கமான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் மோடி ஒரு சர்வாதிகாரி, அதேபோல் தமிழகத்தில் இருக்கக்கூடிய எடப்பாடி ஒரு உதவாக்கரை. எனவே, எதற்கும் உதவாத நிலையில் ஒரு ஆட்சியை அவர் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

தேர்தல் அறிக்கையில் மோடி என்ன சொல்கின்றார் என்றால், முதலில் நாங்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றினோம். இனி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றப் போகின்றோம். இப்பொழுது மக்களின் விருப்பம் என்னவென்று தெரியுமா? உடனடியாக மோடி பதவியில் இருந்து இறங்கி வீட்டிற்கு போக வேண்டும். அதுதான் மக்களின் விருப்பம். அதை மோடி அவர்கள் நிறைவேற்றினால், 1000 கும்பிடு கும்பிடுவதற்கு தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல இந்திய நாட்டில் உள்ள அனைவரும் காத்திருக்கின்றார்கள்.

எனவே, மக்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மோடி என்ன சொல்கின்றார். நான் ஒரு ஏழைத்தாயின் மகன் என்று சொல்லுகின்றார். ஏழைத் தாயின் மகனாக இருந்தால் விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்திருப்பாரா? ஏழைத்தாயின் மகனாக இருந்தால் ஏழைகள் பரம ஏழைகளாக மாறிக் கொண்டு இருக்கின்றார்கள். ஏழைத்தாயின் மகனின் ஆட்சியில் விஜய மல்லையா, லலித் மோடி, கார்ப்பரேட் கம்பெனிகள், அவர்கள் எல்லோரும் கோடி கோடியாக கொள்ளை அடித்துக்கொண்டு போகின்ற காட்சி. அதற்கு காவலாளியாக இருக்கின்றார். மோடியே சொல்கின்றார் நான் ஒரு காவலாளி என்று.

அவர் காவலாளி அல்ல களவாணி. களவாணி தான் ஊழல்வாதிகளுக்கு, கொலைகாரர்களுக்கு, கொள்ளைக்காரர்களுக்கு, காவல் காத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு களவாணி யாக பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் விளங்கிக் கொண்டு இருக்கின்றார்.

அதுமட்டுமல்ல கடைசியாக நான் சொல்ல விரும்புவது, மோடி அவர்கள் என்ன சொல்கின்றார் என்று சொன்னால், ராகுல் காந்தி அவர்கள் மன்னர் குடும்பத்தை சார்ந்தவர் என்று ஒரு விமர்சனத்தை வைக்கிறார். நான் கேட்கின்றேன் மன்னர் குடும்பத்தைச் சார்ந்து இருக்கக் கூடியவர் என்பது உண்மைதான். அந்த மன்னர் குடும்பத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய ராகுல்காந்தி அவர்கள் தான், ஏழைகளின் உள்ளம் அறிந்து மாதம் 6,000 ரூபாய் என ஒரு ஆண்டிற்கு 72,000 ரூபாய் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடியவர்களுக்கு வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற அந்த உணர்வோடு திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கின்றார்கள்.

எனவே நாம் என்னவாக இருக்கிறோம், என்னவாக நடக்கின்றோம், என்ன செய்கின்றோம், என்பதுதான் முக்கியம். எனவே, அந்த உணர்வோடு இன்றைக்கு இந்த அணி அமைந்திருக்கின்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com