திமுக முன்னாள் எம்எல்ஏ உசேன் மறைவு: மு.க.ஸ்டாலின் அஞ்சலி

றைந்த உசேன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். 
திமுக முன்னாள் எம்எல்ஏ உசேன் மறைவு: மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் ஆயிரம் விளக்கு உசேன். இவர் திமுகவின் தலைமை நிலைய செயலாளராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் ஆயிரம் விளக்கு உசேன் இன்று காலை காலமானார். உசேன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த உசேன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஆயிரம் விளக்கு உசேன் அவர்கள், இன்று மறைவெய்தியிருக்கின்றார். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கின்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தூண்களில் ஒருவராக விளங்கியவர், ஆயிரம் விளக்கு உசேன் அவர்கள். தொடக்க காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு உறுப்பினராக, கிளைக் கழகத்தின் செயலாளராக, பகுதிக் கழகத்தின் செயலாளராக, மாவட்டக் கழகத்தின் துணைச் செயலாளராக, தலைமைக் கழகத்தில் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக, தலைமைக் கழக செயலாளர்களில் ஒருவராகவும் இருந்து இந்த இயக்கத்திற்கு பல்வேறு வகைகளில் பணியாற்றியிருக்கின்றார்.

2001ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரையில் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து இந்தத் தொகுதி மக்களுடைய நன்மதிப்பை பெற்றவராக அவர் விளங்கியிருக்கின்றார். தலைவர் கலைஞர் ஆயிரம் விளக்கு உசேனின் தியாகத்தைப் பற்றியும், அவர்களுடைய பணிகளைப் பற்றியும் ஒவ்வொருவரிடத்திலும், அவர் மகிழ்ச்சியோடு பரிமாறிய அந்த நினைவலைகள் எல்லாம் இப்பொழுது என்னிடத்தில் தோன்றிக்கொண்டிருக்கின்றது. ஒரு கூட்ட நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு தொகுதி கழகத்தின் சார்பில், ஆயிரம் விளக்கு உசேன் நடைபயணமாகவும் - சைக்கிள் பயணமாகவும் கட்சிப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். எனவே, கொஞ்சம் எளிய வகையில் அவருடைய பயணம் அமைய வேண்டும் என்பதற்காக, அவருக்கு ஒரு ஸ்கூட்டர் வழங்க முடிவு செய்து, அதற்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அந்தக் கூட்டத்திற்கு தலைவர் கலைஞரே நேரடியாக வந்து ஆயிரம் விளக்கு உசேனுக்கு ஸ்கூட்டரை வழங்கினார்.

அந்தக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசுகின்ற போது, “அலாவுதீனும்  அற்புத விளக்கும் எப்படி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றதோ, அது போல் ஆயிரம் விளக்கில் ஒரு அற்புத விளக்கு” என்று உசேனை பற்றி புகழ்ந்து பாராட்டி  பேசியது, இப்பொழுதும் என்னுடைய நினைவில் இருந்துகொண்டிருக்கின்றது. எனவே, ஒரு தியாகசீலராக - சாதாரண ஒரு தொண்டராக -எல்லோரிடத்திலும் பழகக்கூடிய - எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றிருப்பவராக விளங்கியவர் ஆயிரம் விளக்கு உசேன். எனவே, அவருடைய மறைவென்பது, இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்திருக்கின்றது. அவரை இழந்து வாடிக்கொண்டிருக்கக்கூடிய அவருடைய குடும்பத்தாருக்கு, குறிப்பாக அவருடைய பிள்ளைகளுக்கு, அவருடைய மருமகனுக்கு, அவருடைய உற்றார் உறவினர் அத்துனை பேருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com