
திருவாரூரில் கஜா புயல் நிவாரணப் பொருட்களை வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து, திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வரும் ஜனவரி 28-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் அணையம் அறிவித்தது.
திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் கஜா புயல் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் நிறுத்தப்படும், அதனால் மக்கள் அவதிக்குள்ளாக நேரிடும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த இடைக்கால மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, திருவாரூரில் தேர்தல் பணிகள் தொடங்கியது. நாம் தமிழர், அமமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது.
இதனிடையே திருவாரூரில் கஜா புயல் நிவாரணப் பணிகளை வழங்க அனுமதி கோரி தமிழக தலைமைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரணப் பணிகள் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. நிவாரணப் பணிகள் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்குவதில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நிவாரணப் பொருட்கள் மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வுகளில், அரசியல்வாதிகள் அல்லது அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவற்றை அதிகாரிகளே வழங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.