திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறுமா?

கஜா புயல் காரணமாக திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தலாமா, நடத்தக்கூடாதா? என்பது குறித்து விரிவான அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 
திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறுமா?


கஜா புயல் காரணமாக திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தலாமா, நடத்தக்கூடாதா? என்பது குறித்து விரிவான அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து, காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 31-ஆம் தேதி அறிவித்தது. 

இதனிடையே, திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி. மாரிமுத்து மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், "கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி வீசிய கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் வீடுகள், குடிசைகள் இடிந்தன. பயிர்களும் நாசமாயின. தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக மத்திய அரசின் உயர்நிலைக் குழு நிவாரணப் பணிகளுக்காக ரூ. 1,143 கோடி அளிக்க ஒப்புதல் அறிவிப்பு வெளியிட்ட உடனேயே தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் எவ்வித புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. வாக்களிக்க ஆதாரமாக அளிக்கப்படும் ஆவணங்களில் ஒன்றான ஆதார் எண் அட்டை உள்ளிட்டவற்றை புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் இழந்துள்ளனர்.

எனவே, திருவாரூரில் இயல்புநிலை திரும்பு வரையிலும் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை ஒத்திவைக்கவும், தற்போது நடைபெறும் தேர்தல் நடைமுறைகளுக்குத் தடை விதிக்கவும் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.

இதே போன்று திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரியும், இடைத்தேர்தல் அறிவிப்பு தொடர்பாக மத்திய அரசு ஜனவரி 3-ஆம் தேதி வெளியிடவுள்ள அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜாவும் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் அவர் புதன்கிழமை கடிதம் எழுதினார்.

இதையடுத்து, திருவாரூர் தொகுதியில் தேர்தல் பணிகள் இடையூறு இல்லாமல் நடைபெற்று வந்தது. நாம் தமிழர், அமமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். 

இந்நிலையில், டி.ராஜாவின் மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக தேர்தல் ஆணையத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, கஜா புயல் காரணத்தால் திருவாரூரில் தேர்தல் நடத்தலாமா? நடத்தக்கூடாதா? என்று இடைத்தேர்தலின் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.  

இதனால், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுமா நடைபெறாதா என்பது மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com