ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு 

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு தடைகோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு 

புது தில்லி: ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு தடைகோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அதன் இணையதளத்தில் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது. 

அதில், தமிழக அரசின் உத்தரவு சட்டப்படி தீர்ப்பாயத்தின் ஆய்வுக்கு உள்பட்டது என்றும், வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீடு ஏற்கப்படுவதாகவும் கூறியிருந்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கடந்த மே 28 - ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்திருந்த தீர்ப்பாயம், அன்றைய தினத்திலிருந்து 3 வாரங்களுக்குள்ஆலை செயல்படுவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் புதன்கிழமை தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பசுமைத் தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் உள்ளிட்டவற்றை ஸ்டெர்லைட் நிறுவனம் மாசு ஏற்படுத்துகிறது என்பதற்கான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்த தரவுகள், ஆவணங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை தீர்ப்பாயம் முறையாகப் பரிசீலிக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்க தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவு பொது நலனுக்கு எதிராக உள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

முன்னதாக இதனை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு விடுத்த வேண்டுகோளின் நிராகரித்த உச்ச நீதிமன்றம், பட்டியலிட்டபடியே வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

அதேசமயம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com