மக்களவைத் தேர்தல்: தமிழகத்தின் கடன் சுமையை கண்டுகொள்ளாமல் இருக்கும் திமுக, அதிமுக!

எழுவர் விடுதலை, கல்விக் கடன், நீட் தேர்வு ரத்து என பல்வேறு விஷயங்களைப் பற்றி போட்டிப் போட்டுக் கொண்டு குரல் கொடுக்கும் தமிழகத்தின் முக்கியக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும், ஒரு விஷயத்தை மட்டும் வேண்ட
மக்களவைத் தேர்தல்: தமிழகத்தின் கடன் சுமையை கண்டுகொள்ளாமல் இருக்கும் திமுக, அதிமுக!

சென்னை: எழுவர் விடுதலை, கல்விக் கடன், நீட் தேர்வு ரத்து என பல்வேறு விஷயங்களைப் பற்றி போட்டிப் போட்டுக் கொண்டு குரல் கொடுக்கும் தமிழகத்தின் முக்கியக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும், ஒரு விஷயத்தை மட்டும் வேண்டும் என்றே மறந்து போய்விடுகிறார்கள்.

அதுதான் தமிழகத்தின் கடன் சுமை. ஒன்றல்ல, இரண்டல்ல.. ரூ.4 லட்சம் கோடி கடன் சுமையோடு வறுமையில் வாடும் தமிழகத்தின் நிதிநிலையை தூக்கி சீர் செய்வது குறித்து இவ்விரு கட்சிகளுக்கும் எந்த எண்ணமும் இல்லை போலும்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தமிழகத்தை மாறி மாறி ஆண்ட திமுக - அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்துக்கு இவ்வளவு அதிக கடன் சுமை ஏற்பட்டது என்பது.

மக்களவைத் தேர்தலுக்காகவே இவ்விரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தாலும், பல மாநிலப் பிரச்னைகளும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால், மாநிலத்தின் கடன் சுமை விவகாரத்தில் மட்டும் இவ்விரு கட்சிகளுமே பாராமுகமாகவே உள்ளன.

ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சியாக இருக்கும் போதெல்லாம், மாநிலத்தின் கடன் சுமையை அதிகரித்து விடுவதாக ஆளும் கட்சியை குறை கூறும் கட்சிகள், தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அதனை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுத்ததில்லை. முன்பிருந்த கட்சி செய்ததைப் போலவே அதனை கன்னாபின்னாவென்று உயர்த்திவிட்டுசெல்வதையே வேலையாக வைத்துள்ளன.

ஆனால், ஒவ்வொரு கட்சியின் ஆட்சியிலும் நிதி அமைச்சராக இருப்பவர் கூறுவது என்னவென்றால், மாநில அரசு கடனாக வாங்கும் தொகை முழுவதும் மாநிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவே செலவிடப்படுவதாகவும், கடன் தொகை கட்டுக்குள்ளேயே வைக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளிப்பதுதான். அதே சமயம், ஒவ்வொரு ஆண்டும் கடன் தொகை ஆலமரம் போல கிளை பரப்பி வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடியும் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் சுமை ரூ.3,97,495.96 கோடியாகும். கடந்த 2006ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தின் இந்த கடன் சுமையானது ரூ.57,457 கோடியாக இருந்தது. இது கடந்த 2011 மார்ச் மாதம் ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்து, 2014 - 15ம் நிதியாண்டில் ரூ.2.5 லட்சம் கோடியாக மாறிய கடன் சுமை, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.4 லட்சம் கோடியாக பிரம்மாண்டமாக உருமாறி நிற்கப்போகிறது.

தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், ஓய்வூதிய சலுகைகள் என மிகப்பெரிய தொகையை செலவிட்டு வருகிறது. அதே சமயம், அரசு பெறும் கடன் தொகைக்கு இதே போல மிகப்பெரிய தொகையை வட்டியாகவும் செலுத்தி வருகிறது. தற்போது அதாவது 2019 - 2020ல் மாநில அரசின் வட்டிச் செலவு மட்டும் ரூ.35,332.61 கோடியாக உள்ளது. இது விரைவில் 43,941.76 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில்லாமல், மாநிலத்தின் பல்வேறு வருவாய் காரணிகளை மத்திய அரசு பிடுங்கிக் கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக விற்பனை வரி. மாநிலத்தின் விற்பனை வரியை, ஜிஎஸ்டி என்ற பெயரில் மத்திய அரசு பிடுங்கிக் கொண்டிருப்பதால், மாநில அரசின் நிதிநிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

மாநில அரசுகளின் நிதிநிலை குறிப்பாக தமிழகத்தின் நிதிநிலை சமீபத்தில் இந்த அளவுக்கு மோசமடையக் காரணமே, இலவச அறிவிப்புத் திட்டங்கள்தான் என்று சொல்லலாம், அதனை மறுக்கவே முடியாது. ஆனால், இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த கட்சிகளோ, அது ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த செய்யப்பட்ட திட்டங்கள். எனவே அதனால் கடன் அதிகரித்திருப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்று வாதிடலாம். அதனையும் மறுக்க முடியாது.

இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மாநிலத்தின் கடன் சுமை குறித்து வாய் திறக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வரும் நிலையில், நமது எக்ஸ்பிரஸ் குழுவினர் தராசு ஷியாமிடம் நேர்காணல் நடத்திய போது கிடைத்த தகவல் என்னவென்றால், பல ஆண்டுகளாக தமிழகத்தின் நிதிநிலை கடனோடுதான் பயணித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் நிதிச்சுமையைக் குறைப்பது குறித்து அரசியல் கட்சிகள் நிச்சயம் சிந்திக்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இந்த நிதிச்சுமையை சமாளிக்க மத்திய அரசிடம் நிதியுதவி பெறுவதைக் கூட மாநிலக் கட்சிகள் சிந்திக்காதது கவலை அளிக்கிறது என்றார்.

பல வருவாயை மத்திய அரசு பறித்துக் கொண்டிருப்பதால், மத்திய அரசின் நிதியை நம்பித்தான் மாநில அரசு இருக்க வேண்டிய மோசமான நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதைத் தீர்ப்போம், இதைத் தீர்ப்போம் என்று கட்சிகள் வாக்குறுதி அளிப்பதை விட, இதுபோன்று மாநிலத்தின் மிக முக்கியப் பிரச்னை ஒன்றை மட்டும் கையிலெடுத்து அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லி வாக்குக் கேட்டு, ஆட்சிக்கு வந்ததும், அந்த ஒரு பிரச்னையை மட்டும் தீர்த்திருந்தாலே போதும், மாநிலம் இன்று முன்னணியில் இடம்பிடித்திருக்கும்.

பல பக்கம் அடங்கிய தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல்தோறும் இடம்பெறச் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. முந்தைய தேர்தலில் அளித்த எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை அடுத்த வாக்குறுதி அறிக்கையில் கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்பதையும் தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்தினால் இப்படி ஆளாளுக்கு வாக்குறதி என்ற பெயரில் பொய் மூட்டைகளை அள்ளிவிட்டு, பொதுமக்களை முட்டாளாக்குவதாவது தவிர்க்கப்படலாம்.

மாநிலத்தின் மிக முக்கிய பிரச்னையான கடன் சுமையையே ஒரு கட்சியும் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கும் போது மற்ற பிரச்னைகள் மீது இவர்கள் எந்த அளவுக்கு அக்கறை செலுத்துவார்கள் என்பதை சொல்லித்தான் புரிய வேண்டுமோ மக்களுக்கு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com