
MK Stalin Lok Sabha Election 2019
ஏழைக்குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 உதவித் தொகை என்ற அறிவிப்பால் மோடிக்கு அச்சம் வந்துவிட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து வண்டியூரில் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, பிரதமர் மோடியால் நாடு வளர்ச்சி அடையவில்லை. தளர்ச்சிதான் அடைந்திருக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் மட்டுமே நடப்பட்டுள்ளது. உபி., எய்ம்ஸ்க்கே நிதி ஒதுக்காத மோடி தமிழக எய்ம்ஸ்க்கு எப்படி நிதி ஒதுக்குவார். இதுவரை நிதி ஒதுக்கவில்லை.
ஆண்டுக்கு 3 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் நரேந்திர மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவை 45 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டுச் சென்றுவிட்டார். தமிழகத்தில் ஒரு ஸ்மார்ட் சிட்டி கூட உருவாகும் சூழல் ஏற்படவில்லை.
ஏழைக்குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 உதவித் தொகை என்ற அறிவிப்பால் மோடிக்கு அச்சம் வந்துவிட்டது. ராகுல் காந்தி அறிவித்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை நான் வழிமொழிகிறேன். ராகுல் தலைமையில் ஆட்சி வந்தவுடன் மாதம் ரூ.6000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் திகழ்கிறது.
கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் 15க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மரணம் என்பது மிகப்பெரிய கொடுமை. பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் தான் அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...