துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
duraimurugan dmk
duraimurugan dmk

துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
மூன்றுமுறை தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றியவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளருமான துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.க. தலைமையிலான அதிமுக கூட்டணி படு தோல்வி அடையும் என்று வெளிவரும் சர்வே முடிவுகளும், மத்திய உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கைகளும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எரிச்சலையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே ஆணவத்தின் உச்சகட்டமாக - பிரதமர் நரேந்திரமோடியே நேரடியாகத் தலையிட்டு தி.மு.க. மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்த உத்தரவிட்டிருப்பது காட்டுமிராண்டித்தனமான அதிகார துஷ்பிரயோகம்!

இந்த ஃபாசிஸ்ட் பாய்ச்சலையும், சேடிஸ்ட் சேட்டையையும் பார்த்து திமுக ஒருக்காலும் ஒய்ந்துவிடாது. இது பனங்காட்டு நரி, இந்த வெற்று சலசலப்புக்கெல்லாம் நடுங்கி ஓடிவிடாது. “மிசாவையே” பார்த்து மிரளாத இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை பாவம் புதிதாகப் பிரதமர் பதவியைப் பார்த்து அதில் பித்தம் கொண்டிருக்கும் நரேந்திர மோடிக்குப் புரியாது. அடிக்க அடிக்கத்தான் இந்த திராவிடப் பேரியக்கம் என்ற பந்து வீறுகொண்டு எழும் என்ற உண்மை கூடப் புரியாமல், ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக ஐந்து வருடம் கழித்து விட்டாரே என்று நரேந்திர மோடியைப் பார்க்கப பரிதாபமாகத்தான் இருக்கிறது. திமுகவின் மடியில் கனமில்லை; எனவே அதன் பயணத்தில் எப்போதும் பயம் என்பது ஏற்பட்டதில்லை. விரைவில் பிரதமர் பதவியிலிருந்து ஜனநாயக தேர்தலில் வெளியேற்றப்படும் பிரதமர், மூழ்கும் கப்பலில் இருந்து எப்படியாவது  தப்பித்து விட முடியுமா என்ற நினைப்பில் கடைசி நிமிட வருமான வரித்துறை ரெய்டுகளை தி.மு.க.வின் மீதும், நாடுமுழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் மீதும் நடத்துகிறார். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ஆகிய அனைத்து அமைப்புகளையும் தன்னுடைய சட்டைப் பையில் போட்டு வைத்துக்கொண்டு, சாகசம் செய்து,  தாறுமாறாகப் பயன்படுத்தி வெற்றி பெற்று விட வேண்டும் என்ற அதிகார வெறி அவர் தலைக்குச் சென்று கடைசிக்கட்டப் பேயாட்டம் போடுகிறது. ஒரு நாட்டின் பிரதமர் ஆணவத்தின் சின்னமாகவும், அகங்காரத்தின் உருவமாகவும்,சர்வாதிகாரத்தின் அடையாளமாகவும் மாறி ஊழிக் கூத்தாடுவது, உலகப் புகழ் பெற்ற இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள  மிகப்பெரிய தலைகுனிவு.

முதல்வர் எடப்பாடி தலைமையில் இருக்கும் அமைச்சரவையில் உள்ளவர்கள் மீது இதுவரை பல ரெய்டுகளை நடத்தி- அவர்களிடம் பேரம் பேசி கூட்டணி வைத்து விட்டு, இப்போது தி.மு.க. பக்கம் திரும்பியிருக்கிறார் நரேந்திரமோடி. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு- இப்போது ஒரு “காபந்து சர்க்கார்”! ஆகவே இந்த “காபந்து பிரதமரின்” அதிகாரத்திற்கு, சுதந்திரமான அமைப்புகள் கைகட்டி வாய்பொத்தி நிற்பது மகா கேவலமான நிலைமை. இதுவரை அரசியல் கட்சிகள் மட்டும்தான் தேர்தலில் கூட்டணி  என்ற நிலையை மாற்றி- நேர்மையான அமைப்புகளாகச் செயல்பட வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளும் “எங்களுடன் கூட்டணிதான் “என்ற ரீதியில் மமதையுடன் தேர்தலை நடத்த மத்திய பா.ஜ.க. அரசு நினைப்பதும்- அதை தேர்தல் ஆணையம் செயலிழந்து வேடிக்கை பார்ப்பதும் ஆரோக்கியமானதும் அல்ல- அரசியல் சட்டத்திற்கு உகந்ததும் அல்ல!

“ஹிட்லர்” பாணி அரசியலை, 130 கோடி மக்களைக் கொண்ட வலிமைமிக்க இந்திய ஜனநாயகம் ஒருபோதும் ஏற்காது,அதை மன்னிக்காது. உரிய கடுமையான பாடத்தை நடைபெறுகின்ற 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் “காபந்து” பிரதமராக இருக்கும் நரேந்திரமோடிக்கு இந்திய மக்கள் நிச்சயம் கற்பிப்பார்கள்! அதற்குள் தேர்தலில் நேரடியாக தி.மு.க.வுடன் மோதத் துணிச்சல் சிறிதும் இல்லாத  பா.ஜ.க. இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் காவலாளியாக நின்று, திரைமறைவில் இருந்து கொண்டு, தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் வருமானவரித்துறை ரெய்டை நடத்தியிருக்கிறது. இந்த ரெய்டு பயமுறுத்தலுக்கு எல்லாம் தி.மு.க. என்றைக்கும் அஞ்சாது என்பதை பிரதமர் நரேந்திரமோடிக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளையும், சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்புகளையும் ஆளும் கட்சியின் “காபந்து சர்க்காரிடம்” ஒப்படைத்து விட்டு, எதிர்கட்சிகளுக்கு தேர்தல் களத்தில் “சமவாய்ப்பு” அளித்து விட்டோம் என்று பீற்றிக்கொள்வது, நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு வித்திடாது என்பதை இந்தியத்  தேர்தல் ஆணையம் உணர வேண்டும். ஆகவே, பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். பண விநியோகத்தைத் தடுக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் நோக்கமாக இருந்தால், தேர்தல் காலத்தில் இந்த அமைப்புகள் எல்லாம் “காபந்து பிரதமரின்” தலைமையில் இயங்க தடை விதித்து, உச்சநீதிமன்றத்  தலைமை நீதிபதியின் நேரடிப் பார்வையில் செயல்படுவதற்கான வழிமுறைகளைக்  கண்டிட இந்திய தேர்தல் ஆணையமே ஆராய்ந்து பார்த்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com