ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’  ஆகிவிடக்கூடாது: ஸ்டாலின் 

ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’  ஆகிவிடக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’  ஆகிவிடக்கூடாது: ஸ்டாலின் 

சென்னை: ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’  ஆகிவிடக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திமுகவினருக்கு ஞாயிறன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடர்ச்சியாகப் பயணங்கள். ஓய்வே இல்லாமல் பரப்புரைகள் - எல்லா ஊர்களிலும் பொதுமக்களுடன் சந்திப்பு, நேரடியாக உரையாடல் - வாக்கு சேகரிப்பு என மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகும், களத்திலேயே நிற்கிறோம். காரணம், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் எதிர்பார்ப்பது, மத்தியில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சி சாய்வதை! தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் மக்கள் விரோத ஆட்சிகளின் மாற்றத்தை!             பெரும்பான்மையை இழந்து அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் மைனாரிட்டி அ.தி.மு.க. ஆட்சி ஏற்கனவே வாக்குப் பதிவு நடந்துள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் தன் படுதோல்வி பயத்தை உணர்ந்திருக்கிறது.

கூடுதலாக, மே19-ஆம் நாள் நடைபெறவிருக்கும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனது ஆட்சிக்கான முடிவுரை உறுதியாக எழுதப்படும் என்பதையும் உணர்ந்தே உதறலில் இருக்கிறது. அதனால் ஏற்பட்ட அச்சத்தின் விளைவுதான், மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் மர்மமான முறையில் ஓர் அதிகாரி நுழைந்தது முதல், தேனி - ஈரோடு எனப் பல இடங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் வரையிலான அனைத்து மறைமுக செயல்பாடுகளுமாகும்.

ஒரு தொகுதியில் போட்டியிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்குமான வாக்குகளும்தான் வாக்கு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும். அப்படிப்பட்ட இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் மோசடி முயற்சி நடைபெறுகிறது என்ற தகவல் கிடைத்தால், எந்தவொரு வேட்பாளரும் அது குறித்த உண்மைகளை அறிந்துகொள்வதற்கு விரைந்து வருவதுதான் இயல்பு. மதுரையில் தி.மு.கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களும் மற்றக் கட்சிகளின் வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும்கூட அந்த இடத்திற்கு விரைந்து வந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் மட்டும் அது குறித்து அக்கறையோ கவலையோ கொள்ளவில்லை. தேனி, ஈரோடு போன்ற இடங்களிலும் இதே நிலைதான். இதிலிருந்தே ஆளுங்கட்சியினர் என்ன மனநிலையில் இருக்கிறார்கள், என்னென்ன ரகசியத் திட்டங்களை வகுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’ (பாதுகாவலர்) ஆகிவிடக்கூடாது என்பதை தி.மு.கழகமும் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அது குறித்த சட்டரீதியான அணுகுமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் சூழ்ச்சியான வகையில் என்னதான் தந்திரங்கள் செய்தாலும், மக்கள் மன்றத்தில் அது ஒருபோதும் எடுபடவில்லை, ஏமாற்றமே மிஞ்சும் என்பதை ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வரும் தேர்தல் வாக்குப்பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

மே 19ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 4 தொகுதிகளிலும் இரண்டு கட்டங்களாகப் பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். செல்லும் இடமெல்லாம் மக்களிடமிருந்து உன்னதமான அன்பை, உளப்பூர்வமான வரவேற்பை, உத்தரவாதமான வெற்றியைக் காண்கிறேன். வாகனப் பிரச்சாரத்தில் சாரை சாரையாய் அணிவகுக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி, நடைபாதைகளில், கடைவீதிகளில், பூங்காக்களில், பொதுஇடத்தில் என எல்லா இடங்களிலும் மக்கள் ஆர்வம் மிகுதியுடன் ஓடோடி வந்து, கைகளைப் பற்றிக்கொண்டு, கனிவுடன் ஆதரவளிக்கிறார்கள். ஆட்சி மாற்றத்தை தி.மு.க.வினால்தான் உருவாக்க முடியும் என்பதை உரக்கச் சொல்கிறார்கள். அவர்கள் ஏன் இத்தனை ஆர்வமும் அவசரமும் காட்டுகிறார்கள் என்பதை ஒவ்வொரு தொகுதியின் பயணத்திலும் அறிந்துகொள்ள முடிந்தது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க ஆளுங்கட்சியின் அமைச்சர் பட்டாளம் குவிக்கப்பட்டிருக்கிறது. அருகில் உள்ள மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில், மின்தடையால் அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்ட்டிலேட்டர் இயங்காமல் போய், நோயாளிகள் இறந்து போகிறார்கள். குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல், ஆளுங்கட்சியின் வாக்குசேகரிப்பு நடக்கிறது. முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் என அவரவர் தங்களுக்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிகள் எனக் காரணம் காட்டி எல்லாக் கடமைகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ளப் பார்க்கும் இந்தக் கூட்டம்தான், தேர்தல் ஆணையத்தை தனது முறைகேடுகளுக்கு உடந்தையாக்கிக் கொள்ளப் பார்க்கிறது.

நம்மை வெற்றி பெறச் செய்ய மக்கள் விரும்பி ஆயத்தமாக இருக்கிறார்கள். மக்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதில் நாம் முனைப்பாகச் செயலாற்ற வேண்டும். ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப்போகும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கான முத்திரையைப் பதிப்போம். மே 23க்குப் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம்!

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com