இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்: கமல் கிண்டல் பேச்சு 

ஒரு செருப்பு வந்து சேர்ந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என்று சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்வு ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்  கமல் பேசியுள்ளார்.
இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்: கமல் கிண்டல் பேச்சு 

சென்னை: ஒரு செருப்பு வந்து சேர்ந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என்று சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்வு ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்  கமல் பேசியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்காக தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த 12-  ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர், ' சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே'  என்றார். அவரது இந்த பேச்சு தேசிய அளவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியது. அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் கமல் பிரசாரத்தின் போது தெரிவித்த கருத்துகளினால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து தொடர்ந்து இரண்டு நாட்கள் அவர் பிரசாரம் செய்யவில்லை. பின்னர் அவர் தனது பிரசாரத்தை மீண்டும் துவக்கிய போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

அதேசமயம் திருப்பரங்குன்றத்தில் 16-ஆம் தேதி (வியாழன்) இரவு கமல் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் , மேடையை நோக்கி ஒற்றை செருப்பு, முட்டை ஆகியவை வீசப்பட்டன.

இந்நிலையில் ஒரு செருப்பு வந்து சேர்ந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என்று சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்வு ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்  கமல் பேசியுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒத்த செருப்பு' என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வானது, ஞாயிறன்று வேளச்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்  கமல் மகாத்மா காந்தி குறித்த  சிறு நிகழ்வு ஒன்றை குறிப்பிட்டு பேசினார். அப்போது பிரசாரத்தில் தன் மீது ஒற்றைச் செருப்பு வீசப்பட்டதை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் பேசியதாவது  

ஒரு முறை ரயில் பயணத்தின்போது தனது ஒரு செருப்பு தவறி கீழே விழுந்ததால் யாருக்கேனும் பயன்படட்டும் என்று தனது மற்றொரு செருப்பையும் கழற்றி வீசினார் காந்தி.

நான் காந்தியின் ரசிகன். அவர் கழற்றி வீசிய  ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னொரு செருப்பும் வரும், அதற்காக காத்திருக்கிறேன். அந்த அருகதை எனக்கு உண்டு.

இதில் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை.  என் மீது செருப்பு வீசியவருக்கு தான் அவமானமே தவிர எனக்கு அல்ல. வாழ்த்துக்கள் வளர்க்கும் அளவுக்கு தன்னம்பிக்கை நம்மை வளர்க்காது.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com