
சென்னை: தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரரராஜனுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் (செப்.1-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமையன்று நியமிக்கப்பட்டார். தெலங்கானா மற்றும் ஆந்திராவின் ஒருங்கிணைந்த ஆளுநராக நரசிம்மன் செயல்பட்டு வந்த நிலையில், தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தெலங்கானா மக்களுக்காக தமிழிசை சிறப்பாக பணியாற்றுவார் என நம்புகிறேன்.
-திமுக எம்பி கனிமொழி
தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழிசைக்கு வாழ்த்துகள்.
- பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்
பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி தமிழிசை அவர்களுக்கு வாழ்த்துகள்!
அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன்.
-திமுக தலைவர் ஸ்டாலின்
ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன்; தமிழிசையை வாழ்த்துகிறேன்.
-கவிஞர் வைரமுத்து
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பு மகள் தமிழிசைக்கு வாழ்த்துகள்
- திராவிடர் கழக கி.வீரமணி.
இவ்வாறு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.