சந்திரயான்-2 சோதனையில் பயன்படுத்தப்பட்ட நாமக்கல்லைச் சேர்ந்த 2 கிராமங்களின் மண்! ஏன்? எப்படி?

சந்திரயான்-2 விண்கலம் பல்வேறு கட்ட சோதனைகளைக் கடந்து விண்ணில் ஏவப்பட்டு, அதன் லேண்டர் பகுதி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நிலவில் தரையிறங்க உள்ளது.
சந்திரயான்-2 சோதனையில் பயன்படுத்தப்பட்ட நாமக்கல்லைச் சேர்ந்த 2 கிராமங்களின் மண்! ஏன்? எப்படி?


சந்திரயான்-2 விண்கலம் பல்வேறு கட்ட சோதனைகளைக் கடந்து விண்ணில் ஏவப்பட்டு, அதன் லேண்டர் பகுதி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நிலவில் தரையிறங்க உள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே எதிர்பார்த்திருக்கும் இந்த நிகழ்வினை தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி இந்திய விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர்.

நிலவின் மேற்பரப்பு நமக்கு புதிதாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கிராமங்களுக்கு அது புதிதாக இருக்காது. ஏன் என்றால், இந்த கிராமங்களில் இருக்கும் தரைப்பரப்பும், நிலவின் தரைப்பரப்பும் ஓரளவுக்கு ஒத்துப் போவதுதான்.

அதனாலேயே, சந்திரயான்-2 விண்கலம் சோதனை செய்யப்பட்ட போது, அதற்காக தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தம்பூண்டி, குன்னமலை கிராமத்தில் இருந்து மண் மாதிரி சேகரிக்கப்பட்டு, அதில் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதாவது, இவ்விரு கிராமங்களில் இருப்பது அனார்தசைட் மண். இதுதான் நிலவின் மேற்பரப்பிலும் உள்ளது. எனவே, நிலவுக்குப் பயணித்த சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகிய உபகரணங்கள் தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டம், சித்தம்பூண்டி, குன்னமலை கிராமத்தில் கிடைத்த அனார்தசைட் மண் மாதிரியில் இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது.

இது குறித்து சந்திரயான்-1 திட்ட இயக்குநராக இருந்தவரும், தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சில் துணைத்தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை அளித்த தகவலில், நிலவின் மேற்பரப்பில் இருக்கும் மண் மாதிரியில் சந்தியான் -1 பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதே ஒரு கிலோ 150 டாலர்கள் என்ற மதிப்பில் 10 கிலோ அனார்தசைட் மண் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 

அதுவே 2010ல் சந்திரயான்-2 சோதனைக்கு 60 - 70 கிலோ மண் தேவைப்பட்டது. அதிகப்படியான செலவு காரணமாக மாற்று ஏற்பாடு தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் தேடியபோதுதான் நாமக்கல்லின் இரண்டு கிராமங்களில் இந்த மண் கிடைத்தது.

உடனடியாக சேலத்துக்கு அருகில் இருக்கும் இந்த கிராமங்களில் இருந்து பாறைகள் எடுத்துவரப்பட்டு அவற்றை பொடித்து மண்ணாக்கினோம். அதனை இஸ்ரோ ஆய்வு மையத்தில் நிலவின் மேற்பரப்பைப் போன்று ஏற்படுத்தி சோதனை முயற்சிகளை மேற்கொண்டோம் என்று தெரிவித்தார்.

இதன் மூலம் சோதனைக்கு எவ்வளவு தேவையோ அவ்வள்வு மண் எடுக்கவும், அதையும் இலவசமாகப் பெறவும் முடிந்தது என்று குறிப்பிட்டார்.

இந்த வகையில், இன்று நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் அந்த லேண்டர் விக்ரமுக்கும், தமிழகத்தின் நாமக்கல் கிராமங்களுக்கும் ஒரு விட்ட குறை, தொட்ட குறை இருக்கிறது என்பது அக்கிராம மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே ஒரு பரவச உணர்வு மேலோங்குவதைத் தவிர்க்க முடியாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com