வாழை இலை விற்பனைச் சரிவால் விவசாயிகள் பாதிப்பு

ஊரடங்கு உத்தரவால் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளும்..
வாழை இலை விற்பனைச் சரிவால் விவசாயிகள் பாதிப்பு
Updated on
2 min read

வேலூர்: ஊரடங்கு உத்தரவால் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளும் தடைப்பட்டுள்ளதால் வாழை இலை பயன்பாடு வெகுவாக சரிந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள வாழை சாகுபடி விவசாயிகளின் நலன்காக்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அடிப்படையில் வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் திடீரென பிறப்பிக்கப்பட்ட இந்த நீண்டநாள் ஊரடங்கு பல்வேறு தொழில்களையும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சிறிய பெட்டிக்கடைகளில் தொடங்கி மிகப் பெரிய உற்பத்தித் தொழில் நிறுவனங்களும், அவற்றைச் சார்ந்த உபதொழில்களும் மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

அந்தவகையில், ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருப்பதுடன், திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாழை இலையின் பயன்பாடு முற்றிலும் தடைப்பட்டுள்ளதால் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெருமளவில் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம், கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சுற்றி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழை சாகுபடியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் கூறியது:
வாழை விவசாயத்தைப் பொறுத்தவரை நடவுக்கு ஒருமுறை மட்டுமே குலை கிடைக்கும். வாழைத் தாரால் கிடைக்கும் வருவாயை எதிர்பார்க்க முடியாது. விலை சரிவு காலத்தால் வாழைத் தாரால் நஷ்டமே ஏற்படும். ஆனால் வாழை இலை வியாபாரம் மூலமாகவே விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைத்து வருகிறது. அதிலும், தமிழக அரசு நெகிழிப் பைகளின் பயன்பாட்டுக்குத் தடை விதிதத்தைத் தொடர்ந்து வாழை இலை பயன்பாடு அதிகரித்து, விவசாயிகளுக்கும் நல்ல வருவாய் கிடைத்தது.

அந்த வகையில், வாரத்துக்கு ஒரு விவசாயி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாழை இலைகளை வேலூர், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வந்தோம். இலைக்கு ஒரு ரூபாய் கிடைத்தாலும் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடிந்தது. ஆனால் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிவாஜி, ஏழுமலை ஆகியோர் கூறியது:
ஊரடங்கு உத்தரவால் தற்போது அனைத்து வகை உணவகங்களும் மூடப்பட்டிருப்பதுடன், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாழை மரத்தில் 3 நாள் மட்டுமே இலைகள் தாங்கும். பின்னர் அவை கிழிந்து நாசமாகும். இதனால் ஆயிரக்கணக்கான இலைகளை எரித்து வருகிறேறாம். இந்த இழப்பு காரணமாக வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்குத் தவணை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடும்பம் நடத்தவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு சிறு, குறு வாழை விவசாயிகளின் நலன் காக்க உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக, வாழை பயிரிட ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வரை கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் இக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு வாழை விவசாயிகள், கூட்டுறவுச் சங்கத்தில் வாங்கிய கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யவோ அல்லது மானியம் வழங்கவோ வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com