புதுக்கோட்டை டூ மதுரை : உயிர் காக்கும் மாத்திரைகளுக்கான ஒரு பயணம்
ஊரடங்கு காலத்தில் சில நெகிழ்வான சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டேதான் இருக்கின்றன.


ஊரடங்கு காலத்தில் சில நெகிழ்வான சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
புதுக்கோட்டையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவருக்கு தினமும் கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டிய மாத்திரை கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் களமிறங்கிய தகவல் ஆச்சர்யமானது.
புதுக்கோட்டை மாவட்டம் மேலமுத்துடையான்பட்டியைச் சேர்ந்தவர் எம். ரவிச்சந்திரன் (42). சமையல் மாஸ்டர். இவருக்கு சிறுநீரகம் செயலிழந்ததையடுத்து கடந்த 2019 ஜனவரி 30ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை முடிந்தது. அவருக்கு சிறுநீரகம் வழங்கியவர், அவரின் காதல் மனைவி சித்ரா.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு சில மாத்திரைகளைத் தவறாமல் 12 மணி நேரத்துக்கு ஒன்று என்ற வகையில் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும்.
இப்படியொரு கட்டாயத்தில் ரவிச்சந்திரன் சிக்கினார்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில் மாத்திரை தீர்ந்தது. எல்லா இடங்களிலும் கிடைக்காது. கிடைத்தாலும் வாங்க முடியாது. காரணம் வறுமை.
ரவிச்சந்திரனும், சித்ராவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டபோது, ரவிச்சந்திரனுக்கு சிப்காட்டிலுள்ள ஆலையில் வேலை. திருமணத்துக்குப் பிறகு சமையல் மாஸ்டரானார்.
சிறுநீரகம் செயலிழந்த பிறகு அந்த வேலையும் இயலாமல் போனது. காதல் கணவருக்காக சிறுநீரகம் தானமாக அளித்த சித்ராவும் முன்பைப் போல சுறுசுறுப்பாக வேலைக்கு எங்கும் செல்லவும் முடியாது.
இந்த நெருக்கடியில்தான் 104 என்ற மையப்படுத்தப்பட்ட உதவி எண்ணுக்கு அழைத்தார் ரவிச்சந்திரன்.
அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த மருத்துவர் யாஷிகா, உடனிருந்த புதுக்கோட்டைக்காரர் டாக்டர் சுபாஷ்காந்தியிடம் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.
சுபாஷ்காந்தி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அவசரக் கால உதவிக் குழுவுக்குத் தகவல் தெரிவித்ததுடன் நின்றுவிடாமல் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரிக்கும் தனிச்செய்தி அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து சுகாதாரத் துறை துணை இயக்குநர், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலர் என செய்தி தீயாய்ப் பரவியது. ரவிச்சந்திரனுக்குத் தேவையான மாத்திரை எங்கே இருக்கிறது என்பதையே பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் தொடர்பு கொண்டு அறிந்திருக்கிறார்கள்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அந்த மருந்துகள் இருப்பதை அறிந்தவுடன், அவற்றை எடுத்து வைக்கச் சொல்லிவிட்டு ரவிச்சந்திரனை மதுரைக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தார்கள்.
108 ஆம்புலன்ஸ் தயாரானது. காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரவிச்சந்திரன் வந்துவிட, அங்கிருந்து புறப்பட்டது மருந்துத் தேடலுக்கான பயணம்.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு முற்பகல் 11 மணிக்கெல்லாம் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர்.
முறைப்படி ரவிச்சந்திரனுக்கு வெளிநோயாளி பதிவைச் செய்து 15 நாட்களுக்குத் தேவையான அளவுக்கு மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பினர் அங்குள்ள மருத்துவர்கள்.
ஏறத்தாழ ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள மாத்திரைகள். கிடைத்தன என்பதுடன் இலவசமாகக் கிடைத்தன என்பதுதான் முக்கியம்.
மாவட்ட ஆட்சியர் தொடங்கி அவசரக் காலத் தொடர்பு மைய டாக்டர்கள், 108 பணியாளர்கள், மதுரை மருத்துவமனை டாக்டர்கள் வரை எல்லோரும் ஒரே அலைவரிசையில் உதவிச் சிந்தனையைச் செலுத்தியதன் விளைவு- அவசர நிலைக் காலத்திலும் ஒருவருக்கு மருந்துகள் கிடைத்தன.
ரவிச்சந்திரனின் செல்லிடப்பேசியில் 'காலர்டியூன்' என்ன தெரியுமா?
'தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா...?'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...