
தாய்மாமா கருப்பண கவுண்டர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
பவானி: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அந்தியூரில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சியில் புதன்கிழமை பங்கேற்றார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த மைக்கேல்பாளையம் ஊராட்சி, சமத்துவபுரம், பொய்யேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண கவுண்டர் (98). இவர், வயது மூப்பால் திங்கள்கிழமை இரவு அந்தியூரில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் மூத்த சகோதரர் கருப்பண கவுண்டர். இத்தகவல் அறிந்த தமிழக முதல்வர் பழனிசாமி புதன்கிழமை காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தார்.
அங்கிருந்து, சாலை மார்க்கமாக ஈரோடு மாவட்டம், பவானி வழியாக அந்தியூர் சென்றார். அங்கு, தனது தாய்மாமா மகனும், அதிமுக அந்தியூர் ஒன்றிய முன்னாள் செயலாளருமான கே.பி.எஸ்.ராஜாவை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து கருப்பண கவுண்டர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), ஈ.எம்.ஆர்.ராஜா (அந்தியூர்) உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.