
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை ரூ. 26.52 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 36.73 கோடியில் முடிவுற்ற பணிகளையும் தொடக்கி வைத்தும், ரூ.129.34 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
முன்னதாக சேலத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்துக்கு வந்த முதல்வருக்கு மாவட்ட எல்லையில் அரசுத் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில், ஜயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.கே.ராமஜெயலிங்கம் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து முதல்வருக்கு அரியலூர் ரயில்வே மேம்பாலம், அரியலூர் கடைவீதி, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெருமாள் கோயில் சார்பில் பட்டாச்சாரியார்கள் சார்பில் பூரணகும்ப மரியாதை முதல்வருக்கு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ரூ.26.52 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் தயார் நிலையில் உள்ள ரூ.36.73 கோடியில் மதிப்பிலான பணிகளை தொடக்கி வைத்தார். தொடர்ந்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட துறைகள் சார்பில் 21,509 பயனாளிகளுக்குரூ.129.34 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். மகளிர் குழு, விவசாய சங்கங்களின் பிரதிநிதகள் மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்கு ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.