கடத்தப்பட்ட குழந்தையை மீட்க உதவிய 600 கேமராக்களும் உடைந்த ஹெட்லைட்டும்

சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டில் நவம்பர் 9-ம் தேதி கடத்தப்பட்ட மூன்றரை மாத பெண் குழந்தை 15 மணி நேரத்தில் அம்பத்தூா் தொழிற்பேட்டையில் மீட்கப்பட்டது.
கடத்தப்பட்ட குழந்தையை மீட்க உதவிய 600 கேமராக்களும் உடைந்த ஹெட்லைட்டும்
கடத்தப்பட்ட குழந்தையை மீட்க உதவிய 600 கேமராக்களும் உடைந்த ஹெட்லைட்டும்

சென்னை: சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டில் நவம்பர் 9-ம் தேதி கடத்தப்பட்ட மூன்றரை மாத பெண் குழந்தை 15 மணி நேரத்தில் அம்பத்தூா் தொழிற்பேட்டையில் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தில், குழந்தையை மீட்க 600 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளும், இரு சக்கர வாகனத்தின் உடைந்த ஹெட்லைட்டுமே துருப்புச் சீட்டாக இருந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், நொண்டியம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (29), கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளி. மனைவி சக்தி. இத் தம்பதிக்கு 2 வயதில் ஒரு குழந்தையும், மூன்றரை வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தையும் உள்ளனா்.

கோயம்பேடு கடைப் பகுதியில் குடும்பத்துடன் நவம்பர் 9-ம் தேதி நள்ளிரவு படுத்திருந்தாா். மறுநாள் அதிகாலை வேலைக்கு செல்வதற்கு எழுந்தபோது தன்னுடன் படுத்திருந்த குழந்தை சஞ்சனா அங்கு இல்லை.

கோயம்பேடு காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரித்துவந்த நிலையில், அம்பத்தூா் தொழிற்பேட்டையில் குழந்தை ஒன்று அனாதையாகக் கிடப்பதை அறிந்த காவலர்கள் குழந்தையை மீட்டனர். அக்குழந்தை சஞ்சனாதான் என்பது தெரியவந்தது.

கடத்தப்பட்டக் குழந்தை தேடப்படுவதை அறிந்த குற்றவாளிகள், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் குழந்தையை அனாதையாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். அங்கு பணியிலிருந்த காவலர்கள் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் புகார் கொடுத்த பெற்றோருக்கு வேண்டுமானால் தங்களது வழக்கு முடிந்துவிட்டதாக இருக்கலாம். ஆனால், கோயம்பேடு காவல்நிலைய காவலர்களுக்கு அப்போதுதான் விசாரணைத் தொடங்கியது.

இந்த வழக்கில், ஐந்து காவலர்கள் சுமார் ஆறு நாள்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்தனர். ஆறு நாள்களாக கோயம்பேடு முதல் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை 600 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து, குற்றவாளிகளை கைது செய்திருக்கிறார்கள்.

குழந்தை அனாதையாகக் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அங்கிருந்த ஒரு வாகன விற்பனை நிறுவனத்தில் பொருத்தியிருந்த காமராவில், ஒரு பெண்மணி கையில் குழந்தையுடன் ஆட்டோவிலிருந்து இறங்கி, குழந்தையை ஓரிடத்தில் விட்டுவிட்டுச் செல்வது பதிவாகியிருந்தது. அந்த ஆட்டோவில் ஓட்டுநர் மற்றும் மேலும் ஒருவர் இருந்ததும் கண்டறியப்பட்டது. அந்த ஆட்டோ செல்லும் வழித்தடத்தை அடிப்படையாக வைத்து ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனம் என இப்படியே சுமார் 600 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம்.

அந்த ஆட்டோ அம்பத்தூரிலிருந்து கோயம்பேட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்குச் சென்றது. நல்லவேளையாக, அந்த வீட்டின் அருகே இருந்த வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்படிருந்தது. அதுதான் குற்றவாளிகளை சரியாகக் காட்டிக்கொடுக்க பேருதவி செய்தது. 

அதில்லாமல், அனைத்து வழித்தடங்களிலும் பதிவான சிசிடிவி கேமராக்களில் எப்படி அந்த குறிப்பிட்ட ஒரு ஆட்டோவை சரியாகக் கவனிக்க முடியும் என்ற கேள்வி எழலாம். இங்கு தான் குற்றவாளிக்கு எதிராக அவர்களே ஒரு சாட்சியத்தை வைத்திருந்தனர். அதுதான் உடைந்து போன ஆட்டோவின் ஹெட்லைன். அதனால், அந்த நள்ளிரவு முழுக்க ஆட்டோ முன் விளக்கு இல்லாமலேயே சென்று கொண்டிருந்தது. இதனால், அனைத்து கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பார்த்து ஆட்டோவை எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது என்கிறார்கள் காவலர்கள்.

இந்த வழக்கில், இரண்டு பெண்கள், இரண்டு சிறார்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.15 லட்சத்துக்கு குழந்தையை விற்பனை செய்ய இந்த கும்பல் கடத்தியிருப்பதும், குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தம்பதி, குழந்தையின் பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்று கட்டாயமாகக் கூறிவிட்டதால், குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com