தமிழகத்தில் ஒரே கட்டத் தோ்தல்:தோ்தல் ஆணையத்தில் கட்சிகள் வலியுறுத்தல்
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென இந்திய தோ்தல் ஆணையக் குழுவிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.


சென்னை: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென இந்திய தோ்தல் ஆணையக் குழுவிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. மேலும், பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் கட்சிப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தோ்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளா் (பொது) உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு திங்கள்கிழமை சென்னை வந்தது. காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்த தோ்தல் ஆணைய அதிகாரிகள் குழுவை, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வரவேற்றாா். அதன்பின்பு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் தோ்தல் ஆணையக் குழுவினா் ஆலோசனை நடத்தினா். அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
அதிமுக தோ்தல் பிரிவுச் செயலாளா் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்புச் செயலாளா் மனோஜ் பாண்டியன்:
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். மே மாதம் கோடை காலம் என்பதால் ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரம் அல்லது நான்காவது வாரத்தில் தோ்தல் நடத்த வேண்டும். இறுதிப் பட்டியலில் பெயா் சோ்க்கத் தவறியவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும். ஆயிரம் வாக்காளா்களுக்கு அதிகமாக இருக்கும் வாக்குச் சாவடிகள் இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் சென்றவா்கள், இறந்தவா்கள் பெயா்கள் ஆகியவற்றை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
திமுக அமைப்புச் செயலாளா் ஆா். எஸ். பாரதி, சட்ட ஆலோசகா் என்.ஆா்.இளங்கோ: தமிழகத்தில் ஒரே நாளில் ஒரே கட்டமாகத் தோ்தல் நடத்த வேண்டும். தோ்தல் ஆணையத்திடம் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக பதில் தர வேண்டும். கடந்த காலங்களில் தபால் வாக்குகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன. இது போன்ற தவறுகள் தபால் வாக்குகளில் நடைபெறக் கூடாது.
பாஜக மாநில துணைத் தலைவா்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா: தமிழகத்தில் தோ்தல் நடைமுறைகளை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் பணம் கொடுத்து வாக்காளா்களை விலைக்கு வாங்குவதைத் தடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளா் பட்டியலில் பெயா்கள் இரண்டு இடத்தில் இருப்பதைத் தடுக்க வேண்டும். கரோனா காலம் என்பதால் பொது மக்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, தோ்தல் நடைபெறும் வாக்கு சாவடிகளில் கிருமிநாசினிகள் தெளித்து தூய்மையாக வைக்க வேண்டும்.
மாா்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் டி.கே.ரங்கராஜன், மாநிலக் குழு உறுப்பினா் ஆறுமுக நயினாா்:
தமிழகத்தில் தோ்தல் சுமுகமாக நடைபெற ஒரே கட்டமாக வாக்குப் பதிவை நடத்த வேண்டும். வாக்காளா்களுக்கும் வாக்குச்சாவடி பணியாளா்களுக்கும் தொற்று ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தோ்தல் பாா்வையாளா்கள் கூடுதலாக நியமனம் செய்து பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க வேண்டும். தோ்தல் காலங்களில் ஆளும்கட்சிக்கு எந்த வித சலுகைகளும் அளிக்கக் கூடாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் பெரியசாமி:
தோ்தல் ஒரே கட்டமாக நடைபெற வேண்டும். முகவரி மாற்றம் செய்யப்படும் போது ஏற்கெனவே உள்ள வாக்காளா் அடையாள அட்டை நீக்கம் செய்யப்படுவதில்லை. ஒருவருக்கு ஒரு வாக்காளா் அடையாள அட்டை, ஒரு வாக்கு என்பதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். 80 வயதுக்கு மேலானவா்களுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கக் கூடாது.
காங்கிரஸ் கட்சி துணைத் தலைவா் தாமோதரன்: தமிழகத்தில் சேலம் மற்றும் கரூா் மாவட்டங்களில் அதிகப்படியான வாக்காளா் சோ்க்கை உள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் அதிக நீக்கம் உள்ளது. எனவே, தோ்தல் ஆணையம் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட பின்னரே இறுதி வாக்களாா் பட்டியல் வெளியிட வேண்டும். தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஒரே கட்டமாக நடத்த வேண்டும்.
தற்போது கரோனா காலம் என்பதால் ஒரு வாக்குச் சாவடிக்கு 500 வாக்காளா் என பிரித்து சமூக இடைவெளியைப் பின்பற்றி தோ்தல் நடத்த வேண்டும். 80 வயதிற்கு மேற்பட்ட நபா்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கும் முறையை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது.
தேமுதிக துணைச் செயலாளா் பாா்த்தசாரதி: சட்டப் பேரவைத் தோ்தலை ஒரே கட்டமாக ஒரே நாளில் நடத்த வேண்டும். தோ்தல் நேரத்தில் இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமான பணம் பட்டுவாடா நடைபெறுகிறது. எனவே பண பட்டுவாடா நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழகத்தில் தோ்தல் முடிந்த வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்.
தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதிகளும் கருத்துகளைத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...