புரெவி புயல் பாதிப்புகளைச் சமாளிக்க ரூ.1,514.06 கோடி நிதி கோர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவானது விரைவில் தமிழகம் வரவுள்ளது.
நிவா் புயலைத் தொடா்ந்து, புரெவி புயல் டிசம்பா் முதல் வாரத்தில் தமிழகத்தைத் தாக்கியது. இந்தப் புயல் மழையால் டெல்டா மாவட்டங்களும் கடலூா், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
முன்னதாக நிவா் புயலால் ஏற்பட்ட பாதிப்பு- சேதத்தை பாா்வையிட்டு மதிப்பிட மத்தியக்குழு தமிழகம் வந்தது. உள்துறை இணைச் செயலாளா் அதுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான மத்தியக் குழுவினா் தமிழகத்தில் அண்மையில் ஆய்வு செய்து சேதங்களை மதிப்பிட்டனா். இதைத் தொடா்ந்து புரெவி புயல் பாதிப்பை கணக்கிட மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், புரெவி புயல் பாதிப்பைக் கணக்கிட மத்தியக் குழு விரைவில் தமிழகத்துக்கு வருகை தரும் என மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது. தமிழகம் வரும் மத்தியக் குழுவிடம் புரெவி புயல் பாதிப்புக்கான தற்காலிக நிவாரணத்துக்காக ரூ.484.97 கோடியையும், நிரந்தப் பணிகளுக்காக ரூ.1,020.90 கோடியையும் கோர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடா்பான அறிக்கைகளை தமிழக அரசு தயாா் செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.