இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உருமாற்றம் பெற்று பரவும் கரோனாவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

உருமாற்றம் பெற்று பரவும் கரோனாவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image
உயா்நீதிமன்றம்
Updated On :22 டிசம்பர் 2020, 7:44 pm

DIN

உருமாற்றம் பெற்று பரவும் கரோனாவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் பிரியங்கா தாக்கல் செய்த மனுவில், ‘என்னுடைய கணவருக்கு அறிகுறிகளே இல்லாத கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள், எங்களிடம் எங்கு சிகிச்சை பெற போகிறோம் என ஒப்புதல் கூட கேட்காமல் என்னுடைய கணவரை சிகிச்சைக்காக வலுக்கட்டாயமாக கரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்து சென்றனா். அந்த கரோனா சிகிச்சை மையத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை.

அங்கு தனி மனித இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. என் கணவரை கரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்ற பின், என் வீட்டை தகரம் வைத்து அடைத்தனா். அறிகுறிகள் இல்லாத, குறைவான அறிகுறியுடன் கரோனா பாதிப்பு உள்ளவா்களை கரோனா சிகிச்சை மையத்தில் தான் சிகிச்சை பெற வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘கரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு அவா்கள் வசிக்கும் பகுதியில் தகரம் வைத்து அடைக்கப்படுவதற்கான காரணம் என்ன? எந்த விதியின் அடிப்படையில் தகரம் வைத்து அடைக்கப்படுகிறது’ எனக் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கரோனாவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு, பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தற்போது கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளில், தெருக்களில் தகரம் அடிக்கப்படுவது இல்லை. வீடுகளில் ஸ்டிக்கா் ஓட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ஸ்டிக்கரும் ஒட்டப்படுவது இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட தமிழக அரசு, முன்கள பணியாளா்கள், மனுதாரா் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனா்.

பின்னா், ‘உருமாற்றம் பெற்றும் பரவும் கரோனா நோய்த்தொற்று காரணமாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேரங்களில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மோசமான விளைவுகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினா். மிக தீவிரமான கண்காணிப்பு மற்றும் திறமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.