புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான அனுமதியை திரும்பப்பெற புதுவை முதல்வருக்கு ஆளுநர் கடிதம்
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான அனுமதியை திரும்பப்பெற கோரி முதல்வர் வே.நாராயணசாமிக்கு, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.


புதுச்சேரி: புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான அனுமதியை திரும்பப்பெற கோரி முதல்வர் வே.நாராயணசாமிக்கு, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இந்நிலையில், மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய முதல்வர் நாராயணசாமி, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படும், தடை விதிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் நாராயணசாமிக்கு, ஆளுநர் கிரண் பேடி புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:
உச்ச நீதிமன்றம் டிச.18-இல் வெளியிட்ட தீர்ப்பில் பத்தி 8-இல் "ஒவ்வொரு மாநிலமும் விழிப்புடன் செயல்பட வேண்டும், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும். கரோனா பரவல் உச்சபட்ச நேரமாக இருக்க வாய்ப்பு இருப்பதால் வேறு அம்சங்களைவிட குடிமக்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு தான் முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எனவே, கரோனா பரவலை கட்டுப்படுத்த விழிப்புடன் செயல்படுவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் 11-ஆவது பத்தியில் இந்த காலகட்டத்தில் அவசியமான நிகழ்ச்சிகள் தவிர மற்றவைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் கரோனா பரவல் அதிவேகமாக பரவி வருவதை கணக்கில்கொண்டு தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்து டிச.21-இல் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. டிச.31, ஜன.1-ஆம் தேதிகளில் கடற்கரைகள், ஹோட்டல்கள், கிளப்களில் புத்தாண்டு கொண்டாட அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளித்தால் தமிழக சுற்றுலா பயணிகளுக்கு புதுச்சேரி, காரைக்கால்தான் புத்தாண்டு கொண்டாடும் இலக்காக மாறும். வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை தடுப்பதில் புவியியல் சார்ந்த பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. எனவே, புதுவையில் கரோனா பரவும் ஆபத்தை தடுக்க தமிழகத்தை போல புதுவையிலும் தடை விதிக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ஆளுநர் கிரண் பேடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...