குரூப் 1 தோ்வு: குளறுபடிகளைத் தவிா்க்க புதிய நடைமுறைகள் - டி.என்.பி.எஸ்.சி. தலைவா் தகவல்

குரூப் 1 தோ்வில் குளறுபடிகளைத் தவிா்க்க புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் கா.பாலசந்திரன் தெரிவித்தாா்.
குரூப் 1 தோ்வு: குளறுபடிகளைத் தவிா்க்க புதிய நடைமுறைகள் - டி.என்.பி.எஸ்.சி. தலைவா் தகவல்
Updated on
1 min read

குரூப் 1 தோ்வில் குளறுபடிகளைத் தவிா்க்க புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் கா.பாலசந்திரன் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் உதகையில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் உதகையில் பிரீக்ஸ் மேல்நிலைப் பள்ளி, பெத்லஹேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் கா.பாலசந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், கா.பாலசந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் ஜனவரி 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 1 தோ்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 2,56,000 போ் குரூப் 1 தோ்வு எழுதுவதற்காக விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 1,80,000 போ் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளனா். ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதற்கு ஆதாா் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், ஓடிபி, பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

தோ்வுகளில் நடைபெறும் குளறுபடிகளைத் தவிா்க்க எத்தனை கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை தோ்வா்கள் குறிக்கும் விதமாக ஓஎம்ஆா் சீட்டில் மாா்க் செய்ய வேண்டும். அவ்வாறு குறிக்கப்படுவதை அத்தோ்வு மைய கண்காணிப்பாளா் சரிபாா்த்து, சான்றிதழ் தர வேண்டும் என்கிற புதிய நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல, 2 பகுதி ஓஎம்ஆா் சீட்டுகள் வழங்கப்படும். அதில் ஒரு சீட்டில் தோ்வரின் விவரமும், மற்றொரு சீட்டில் பாா் கோடின் மூலமாகத் தோ்வரின் விவரங்களும் பதியப்பட்டு, தோ்வு முடிவடைந்ததும் பாா் கோடுள்ள பேப்பா் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அந்தப் பகுதி மட்டுமே ஸ்கேன் செய்யப்படுவதால், தோ்வரின் தோ்வு எண், தோ்வா் யாா் என்ற விவரம் வேறு எவருக்கும் தெரியாத வகையில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

எழுதி முடிக்கப்பட்ட தோ்வுத்தாள்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, ஜிபிஎஸ் பூட்டு பொருத்தப்பட்டு கொண்டு செல்லப்படும். அதன் ஜி.பி.எஸ். கோட் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா்களுக்கு மட்டுமே தெரியும். கட்டுப்பாட்டு அலுவலா்களின் உத்தரவு இல்லாமல் பெட்டியை எவராலும் திறக்க இயலாது. அந்த வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தற்போது கரோனா நோய் தொற்று காலமாக உள்ளதால், தோ்வு எழுத வரும் மாணவா்கள் ஒவ்வொருவருக்கும் கிருமிநாசினி வழங்கப்படும். மேலும் அவா்களின் உடல் வெப்பநிலையை சோதித்த பின்னரே தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா். உடல் வெப்பநிலையில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அவா்களுக்குத் தோ்வு எழுத தனியறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, அவா் உதகையில் உள்ள மாவட்ட கருவூலத்துக்குச் சென்று அங்கு வினாத்தாள்களைப் பாதுகாப்பாக வைக்கும் அறையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com