அந்த வகையில், கடந்த 2017-18ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், 2019-20ஆம் கல்வியாண்டில் கரூரில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-20ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019-ஆம் ஆண்டில், இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று சரித்திர சாதனையை படைத்துள்ளது.