
தென் மேற்கு பருவமழை கேரளத்திலும், மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களிலும் துவங்கியுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தென்மேற்கு பருவமழை கேரளத்திலும், மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களிலும் துவங்கியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக மாறி வடக்கு திசையில் நகரும்.
இதனால் இலட்சத்தீவு கேரள கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் கர்நாடக மற்றும் கோவா கடலோர பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்த கடலோர பகுதியில் வசிக்கும் மீனவர்கள் வரும் 04.06.2020 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. “நிஷர்கா” புயலாக மாறி இன்று முதல் மகாராஷ்டிரம் மற்றம் குஜராத்தை நோக்கி நகரும்.
வரும் 04.06.2020 ஆம் தேதிக்குள் இரண்டு மாநிலங்களுக்கு இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.