கள்ளப்பெரம்பூர் ஏரியில் குடிமராமத்து பணி தொடக்கம்

தஞ்சாவூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியில் குடிமராமத்து பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
தஞ்சாவூர் கள்ளப்பெரம்பூர் செங்கழு நீர் ஏரியில் புதன்கிழமை தொடங்கப்பட்ட குடிமராமத்து பணி.
தஞ்சாவூர் கள்ளப்பெரம்பூர் செங்கழு நீர் ஏரியில் புதன்கிழமை தொடங்கப்பட்ட குடிமராமத்து பணி.

தஞ்சாவூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியில் குடிமராமத்து பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

சோழர்கள் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரி ஏறத்தாழ 640 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனந்த காவேரி வாய்க்காலில் இருந்து கச்சமங்கலம் அணையின் மேல் பகுதியில் பிரிந்து 19 கி.மீ. கடந்து இந்த ஏரியில் தண்ணீர் கலக்கிறது. இதன் நீர் சேமிப்பு 41.82 மில்லியன் கன அடி. இந்த ஏரி மூலம் 2,662 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. 

இதன் மூலம், கள்ளப்பெரம்பூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சீராளூர், சக்கரசாமந்தம், வடகால், ராயந்தூர், குணமங்கலம், சித்தாயல், சித்திரக்குடி உள்ளிட்ட கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. 
எட்டு மதகுகள் கொண்ட இந்த ஏரியில் கிழக்கு, வடக்குப் புறத்தில் மட்டும் கரை உள்ளது. ஆனால், பராமரிப்பின்மைக் காரணமாக இந்த ஏரி முழுவதும் காட்டாமணக்கு, காட்டுக் கருவைச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், இந்த ஏரியில் நீர் பிடிப்புப் பரப்பும் குறைந்தது.

இந்த ஏரியைத் தூர் வார வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இதனிடையே, இந்த ஏரியைத் தூர் வாருவது என கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரி பாசனதாரர் சங்கத்தினர் முடிவு செய்தனர். வெளிநாட்டில் வாழும் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோரின் நிதியுதவியின் மூலம் திரட்டப்பட்ட ஏறத்தாழ ரூ. 9 லட்சத்தை மாவட்ட ஆட்சியரிடம் சங்கத்தினர் இரு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கினர். 

இதைத்தொடர்ந்து, இந்த ஏரியைத் தூர் வாருவதற்கு அரசுத் தரப்பில் சுமார் ரூ. 88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இப்பணி தொடங்கப்படவில்லை. எனவே, கடந்த ஆண்டு இந்த ஏரியில் தூர் வாரும் பணியை ஏரி பாசனதாரர்கள் மேற்கொண்டனர். என்றாலும், இந்த ஏரியை முழுமையாகத் தூர் வார இயலவில்லை. இந்நிலையில், தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஏரியைப் புனரமைக்கும் பணி வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் தெரிவித்தது:

இப்பணியில் 4 மதகுகள் மறு கட்டுமானமும், ஏரியைத் தூர் வாரி மணற்குன்றுகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ. 92 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வரும் வரை இப்பணி தொடரும். தண்ணீர் வந்த பிறகு பணியை நிறுத்திவிட்டு மீண்டும் அடுத்த ஆண்டு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com