மோடி - அமித்ஷா கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிற காலம் தொலைவில் இல்லை: கே.எஸ்.அழகிரி

மோடி - அமித்ஷா கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிற காலம் மிக தொலைவில் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி
Updated on
2 min read

மோடி - அமித்ஷா கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிற காலம் மிக தொலைவில் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், பொருளாதார வளர்ச்சி சரிவு குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்  ரகுராம் ராஜன் கூறும்போது, ‘மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த கவனம் செலுத்தவில்லை. மாறாக, அரசியல் செய்வதிலும் மற்றும் சமூக ரீதியான கொள்கைகளிலும் தான் கவனம் செலுத்துகிறது. பொருளாதார சரிவிற்கு இதுதான் முக்கிய காரணம்” என கூறியுள்ளார். இதை விட நாட்டு நிலையை எவரும் துல்லியமாக மதிப்பிட்டு கூற முடியாது.

இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வேன் என்று வாக்குறுதி கொடுத்து அமோக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியில் அமர்ந்த நரேந்திர மோடி அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஆனால் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா மூலமாக மக்களை மதரீதியாக பிளவு படுத்துகிற அரசியலை செய்து வருகிறார். 136 கோடி இந்திய மக்களின் குடியுரிமைக்கு ஆபத்து ஏற்படுகிற வகையில் குடியுரிமை சட்டத்தை திருத்தியிருக்கிறார். இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டு கடுமையான போராட்ட்ங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக குடியுரிமை பாதுகாப்பு கோரி இரவு பகல் பாராமல் ஷாகின்பாக் பகுதியில் தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் போராடடம் நடத்தி வருகிறார்கள். இந்த போராடடக்காரர்களை சந்திப்பதற்கு பிரதமர் மோடிக்கு அவகாசம் இல்லை என்றாலும் உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். ஆனால் மத்திய அரசு செய்யவேண்டிய பணியை உச்சநீதிமன்றம் செய்து வருகிறது.

அதேபோல மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் வெறுப்பான பேச்சுக்களை பா.ஜ.க.வை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா போன்றவர்கள் பேசியதை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளீதர் குறிப்பிட்டு அவர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று காவல்துறையினரை கடுமையாக கண்டித்தார். அதையொட்டி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதீவு செய்வதற்கு பதிலாக நீதிபதி முரளீதரை பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றத்திற்கு இரவோடு இரவாக இடமாற்றம் செய்யப்பட்டு பழிவாங்கப்படடார். இது தான் நரேந்திர மோடி - அமித்ஷா ஆட்சியின் அணுகுமுறையாகும். இதை விட ஜனநாயகத்திற்கு விரோதமான சர்வாதிகார ஆட்சிமுறை வேறெதுவும் இருக்க முடியாது.

எனவே, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளின்படி இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வதற்கு மாறாக படுபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. மக்களிடையே வாங்கும் சக்தி இல்லை, முதலீடுகள் இல்லை, வேலையில்லா  திண்டாட்டம், தொழிலாளர்கள் வேலை இழப்பு என அனைத்து நிலைகளிலும் இந்திய பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கிறது. இதன்மூலம் எழுகிற கடுமையான விமர்சனங்களை திசை திருப்புவதற்காக மதவாத அரசியலை தீவிரப்படுத்தி, செயல்படுத்தி வருகிற மோடி - அமித்ஷா கூடடணி ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிற காலம் மிக தொலைவில் இல்லை. இதன் மூலம் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு உரிய பாடம் கற்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com