சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மறு அறிவிப்பு வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

News image
ஸ்டாலின்
Updated On :5 மார்ச் 2020, 7:08 am

DIN

மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 1300 மின் கணக்கீட்டாளர்கள் (ASSESSOR) பதவிக்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும்” என்று அ.தி.மு.க. அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

 ஏற்கனவே இந்தி படித்தவர்களை எல்லாம் உதவிப் பொறியாளர்களாக நியமித்த முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி தலைமையிலான அரசு; அந்த மோசமான முன்னுதாரணத்தை தொடர்ந்து இப்போது, வீடு வீடாகச் சென்று மீட்டர் ரீடிங் எடுக்கும் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான தேர்வினை, முழுவதும் தமிழில் நடத்திட மறுப்பது; வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு, பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருக்கும் கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் திட்டமிட்ட சதியோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

இந்தத் தேர்வுக்கான அறிவிப்பில், “இப்பதவிக்கு விண்ணப்பிப்பவருக்குக் கட்டாயம் தமிழ் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” - “தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்” - “தமிழ்மீடியம் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும்” என்றெல்லாம் “ஒப்பனைக்கு”க் குறிப்பிட்டு விட்டு, "ஆன்லைன் தேர்வு மட்டும் முழுக்க முழுக்க தமிழில் நடைபெறாது" என்று அறிவிப்பது, முற்றிலும் அநீதியான தேர்வு முறையாகும்.

தவறான கேள்விகளுக்கு “நெகடிவ் மதிப்பெண்” வழங்கும் முறையும், படித்து விட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற இளைஞர்களை அடியோடு புறக்கணிக்கும் செயலாகும்.

தேர்வில் வெற்றி பெறுபவர்களில், “ஒரு பதவிக்கு இருவர் என்ற அளவில் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு அழைக்கப்படுவார்கள்” என்பது, முறையற்ற - எவ்வித நியாயமும் இல்லாத அளவுகோலாக இருக்கிறது.

மின் வாரியப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்துவது, ஏதோ “மின் கொள்முதல்” போன்றதல்ல; மாறாக, வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி, தமிழ்நாட்டில் தமிழில் ஆன்லைன் தேர்வு நடத்துவது முக்கியம், அதுவே பொருத்தமானது, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியது, என்பதை மின்துறை அமைச்சர் திரு. தங்கமணி உணர்ந்து, ஏற்பட்டுவிட்ட தவறை உடனடியாகத் திருத்திக் கொண்டு, மறு அறிவிப்பு வெளியிட முன்வர வேண்டும்.

ஆகவே, கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புறங்களில் - ஏழ்மையான சூழ்நிலையில் பட்டப் படிப்புகளை முடித்துள்ள இளைஞர்களும், மின் கணக்கீட்டாளர் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில், இந்தப் பதவிக்குரிய ஆன்லைன் தேர்வினை முழுமையாகத் தமிழில் நடத்திட வேண்டும் என்றும், தவறான கேள்விகளுக்கு “நெகடிவ்” மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

கிராமப்புறப் பட்டதாரிகளின் நலன் கருதி, முதலமைச்சரும் மின்துறை அமைச்சருக்கு உரிய ஆணை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.