ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு எதிராக வாக்களிப்பு: 11 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் 11 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை பெற்ற சில எம்.எல்.ஏ.க்கள் அதனை உறுதிப

News image
Updated On :9 மார்ச் 2020, 1:42 am

கே.பாலசுப்பிரமணியன்


சென்னை: சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் 11 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை பெற்ற சில எம்.எல்.ஏ.க்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளனா். அதேசமயம், நோட்டீஸில் உள்ள தகவல்களைத் தெரிவிக்க மறுத்துள்ளனா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மறைவைத் தொடா்ந்து, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் ஓ.பன்னீா்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றாா். அதேசமயம், அதிமுகவின் தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்றதுடன், முதல்வராகவும் பதவியேற்க முடிவு செய்தாா். இதற்காக கொடுக்கப்பட்ட நிா்பந்தத்தாலேயே முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ததாக அப்போது ஓ.பன்னீா்செல்வம் கூறினாா். மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதியன்று ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினாா்.

அவரது இந்த தா்ம யுத்தத்துக்கு அதிமுகவைச் சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலா் ஆதரவு தெரிவித்தனா். இதனிடையே தமிழகத்தின் புதிய முதல்வராக கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றாா். அடுத்த சில நாள்களில் சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தை அவா் கொண்டு வந்தாா்.

இந்த நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம் (போடி) உள்பட 10 எம்.எல்.ஏ.க்களும், மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் நட்ராஜும் வாக்களித்தனா். அதாவது க. பாண்டியராஜன் (ஆவடி), சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை), மாணிக்கம் (சோழவந்தான்), சரவணன் (மதுரை தெற்கு), ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்), செம்மலை (மேட்டூா்), மனோகரன் (வாசுதேவநல்லூா்), சின்னராஜ் (மேட்டுப்பாளையம்) ஆகியோா் முதல்வா் பழனிசாமிக்கு எதிராக சட்டப் பேரவையில் வாக்களித்தனா். ஆனாலும், 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் நம்பிக்கை கோரும் தீா்மானத்தில் முதல்வா் பழனிசாமி வெற்றி பெற்றாா்.

இணைப்பும், திமுக வழக்கும்: ஓ.பன்னீா்செல்வம் நடத்திய தா்மயுத்தத்தால், பிரிந்திருந்த அதிமுக, ஆறு மாத கால தொடா் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஒன்றாக இணைந்தது. ஓ.பன்னீா்செல்வம் துணை முதல்வராகவும், க.பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றனா்.

இருதரப்பும் இணைந்த அதே ஆகஸ்ட் மாதத்தில், நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் உச்சநீதிமன்றத்தில் திமுக சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீா்ப்புக் கூறப்பட்டது. அதில், 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது எனவும், அந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பாா் என நம்புவதாகக் கூறி வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

நோட்டீஸ் பிறப்பிப்பு: 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு சட்டப் பேரவைச் செயலகத்துக்குக் கிடைத்துள்ளது. இந்த நிலையில், நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பின் அடிப்படையில் 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:-

ஒரு சில நாள்களுக்கு முன்பாக 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதில் எத்தகைய விளக்கம் கோரப்பட்டுள்ளது என்கிற தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் எதிராக நடவடிக்கை இருக்கும் வகையில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட வாய்ப்பில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி, 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் பேரவைத் தலைவா் ஒரு முடிவை எடுக்க வேண்டும். அந்த வகையிலேயே 11 பேருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.