கரோனாவால் ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்

கரோனாவால் ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்
எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

கரோனாவால் ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் இன்று கரோனா வைரஸ் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர்,  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எல்லாம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது என்பதை, நாம் உளப்பூர்வமாக உணர்கிறோம். அதனால் வேலையிழப்பு, தொழில் இழப்பு, வருமான இழப்பு ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை அமைந்திருக்கிறது.

இதை ஒரு 'பொருளாதார எமர்ஜென்சியாக' பிரிட்டன் அறிவித்து 'பிசினஸ் பேக்கேஜ்' என்ற ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதன்படி அங்கிருக்கும் சிறு தொழில்களுக்கு ரொக்க மான்யம் வழங்குவதாக, குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல, தொழில்களுக்கு மான்யம் அளிக்கப்படும் என்றும், வரி, வாடகை, குடிநீர், மின் மற்றும் சமையல் எரிவாயு கட்டணங்கள் வசூல் எல்லாம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அந்த நாடு அறிவித்துள்ளது. 

சம்பளம் வழங்குதல், வரிச் சலுகை போன்ற 'மீட்பு பேக்கேஜ்களை' நியூசிலாந்து அறிவித்திருக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான சலுகைகளை அதிகரிப்பது, சிறு தொழில்கள் கம்பெனிகளுக்கு ஆதரவு அளிக்கும் சலுகைகள், வரி கடன் செலுத்துவதற்கு கால அவகாசம், போன்றவற்றை இத்தாலி நாடு அறிவித்திருக்கிறது. தொழில்கள் வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பாதுகாக்க வரம்பில்லாத கடன் வழங்கும் முறையை ஜெர்மனி அறிவித்திருக்கிறது.

அதுமட்டுமின்றி இந்தியாவில் ஒடிசா மாநிலம் கரோனா பரவுவதைத் தடுக்க ஒரு புதிய யுக்தியை கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறது. வெளிநாடு சென்று வந்தவர்கள் தாங்களாகவே அரசிடம் பதிவு செய்து கொண்டு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டால் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு என்றும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 

ஆகவே, மேற்கண்ட இந்த மாதிரிகளை நம்முடைய தமிழக அரசும் கடைப்பிடித்து கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் பொருளாதார, பொது சுகாதார பாதிப்புகளை தடுக்க வலுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நம்முடைய அரசும் எடுக்க வேண்டும் என்று தங்கள் மூலமாக வலியுறுத்திக் கேட்டு அமர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com