
பாரத் நெட் திட்ட ஒப்பந்தப் புள்ளிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.
“பாரத்நெட்” திட்ட டெண்டருக்கு மத்திய அரசு தடைவிதித்திருப்பதன் மூலம் அ.தி.மு.க. அரசின் டெண்டர்களில் ஊழல் தலைவிரித்தாடுவது உறுதியாகி இருப்பதால், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை பதவிநீக்கம் செய்ய வேண்டும். மேலும், ரூ.1815 கோடி டெண்டர் முறைகேட்டில் தொடர்புள்ள அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,“பாரத் நெட் டெண்டருக்கு மத்திய அரசு தடை விதித்து இருப்பதாகவும், ஊழல் தலை விரித்து ஆடுவது உறுதியாகி இருப்பதாகவும்” என்று உண்மையை திரித்து அரசியல் செய்வது வியப்பாக உள்ளது. மத்திய அரசு, பாரத் நெட் திட்ட ஒப்பந்தப் புள்ளிகளுக்கு தடை ஏதும் செய்யவில்லை. இது போன்ற தடைகளைத் தகர்த்து தமிழக அரசு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தொலைநோக்கு பார்வையோடு இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா நோய் தடுப்பு பணியில் தமிழ்நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகளை பாராட்டுவதற்கு பதிலாக இது போன்ற உண்மைக்கு மாறான அறிக்கைகளை தொடர்ந்து வெளியிடுவதை எதிர்க்கட்சித் தலைவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ஆனால், உண்மை நிலையை மக்கள் நன்கு அறிவார்கள். இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.