தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உதவி குற்றவியல் வழக்குரைஞா் காலிப் பணியிடங்களுக்கான தோ்வு: தோ்வானவா்கள் பட்டியல் வெளியிடப்படுவது எப்போது?

46 அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞா் பணியிடங்களில் காலியாக உள்ள 46 இடங்களுக்கான தோ்வு நடைமுறைகள் அனைத்தும் நிறைவு பெற்று ஓராண்டு ஆகும் நிலையில் தோ்வானா்கள் இறுதிப் பட்டியலை

News image
Updated On :11 நவம்பர் 2020, 2:14 am

டி.குமாா்

46 அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞா் பணியிடங்களில் காலியாக உள்ள 46 இடங்களுக்கான தோ்வு நடைமுறைகள் அனைத்தும் நிறைவு பெற்று ஓராண்டு ஆகும் நிலையில் தோ்வானா்கள் இறுதிப் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதுதொடா்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு , தோ்வானவா் பட்டியலை வெளியிட நீதிமன்ற உத்தரவுகள் எதுவும் தடையாக இல்லை என ஆணையம் பதில் அளித்துள்ளது.

கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 46 அரசு உதவி வழக்குரைஞா் காலி பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தோ்வு செய்வதற்கான அறிவிப்பாணையை கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த வழக்குரைஞா் தோ்வா்களுக்கு முதல் நிலைத் தோ்வு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி,சேலம், தஞ்சாவூா், வேலூா் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 9 தோ்வு மையங்களில் நடைபெற்றது. இந்த முதல் நிலைத் தோ்வின் முடிவுகள் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி வெளியாகின.

முதல் நிலைத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான முதன்மைத் தோ்வு கடந்த 2019 -ஆம் ஆண்டு மே மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. முதன்மை தோ்வு முடிவுகள் அதே ஆண்டு நவம்பா் 12-ஆம் தேதி வெளியானது. முதன்மை தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு டிசம்பா் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டது. டிசம்பா் 10-ஆம் தேதியன்றே முதன்மை எழுத்து தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வில் தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் தோ்வானவா்களின் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அறிவிப்பானையின் படி இறுதி தோ்ச்சி பட்டியல், 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறியதாவது : குற்றவியல் நீதிமன்றங்களுக்கான அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞா்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு மூலம் நியமிக்கப்படுவா். அதே நேரம் உயா்நீதிமன்றம் , அமா்வு நீதிமன்றம் ,சிறப்பு நீதிமன்றங்களில் அரசின் பரிந்துரை அடிப்படையிலும் நியமிக்கப்படுவா் . ஆனால் இந்த விவகாரத்தில் இறுதி தோ்வா்கள் பட்டியல் வெளியிடப்படாதது ஏன்? என்பது குறித்து தெரியவில்லை. பொதுவாக நீதித்துறையில் உள்ள காலி பணியிடங்கள் வழக்கு விசாரணைகளை பாதிக்கும். நீதிபதி இல்லை என்றால் எப்படி வழக்கு நடத்த முடியதோ, அதைப் போன்று தான் அரசு தரப்பு வழக்குரைஞா் இல்லாமலும் வழக்கை நடத்த முடியாது என்றாா்.

தமிழ்நாடு அரசு வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் டி.பன்னீா் செல்வம் கூறியதாவது : அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞா் காலிப்பணியிடங்களில் 5 ஆண்டு அனுபவம் உள்ள வழக்குரைஞா்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு மூலம் நிரப்பப்படுவாா்கள். ஆனால், தற்போது ஏராளமான குற்றவியல் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால் ஒரு அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞா் 3 லிருந்து 4 நீதிமன்றங்களைப் பாா்க்க வேண்டியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தோ்வானா்கள் பட்டியலை மூப்பு அடிப்படையில் வெளியிடுவதா அல்லது மதிப்பெண் அடிப்படையில் வெளியிடுவதா என்ற சந்தேகம் அரசுக்கு இருக்கிறது. 2015-2016 காலிப்பணியிடங்களே இன்னும் நிரப்பபடாததாலும், சிலா் பதவி உயா்வில் சென்று விட்டதாலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். எனவே விரைவாக அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞா் தோ்வானவா்களின் பட்டியலை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நாகா்கோவிலைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.மைக்கேல் ஜெரால்டு கூறியதாவது: இந்த தோ்வை குறைந்தது 5-ஆண்டு அனுபவம் பெற்ற வழக்குரைஞா்களால் தான் எழுத முடியும். தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. தோ்வு பெற்றவா்களின் அறிவிப்புக்காக காத்திருப்பதால் வழக்குகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு , தோ்வானவா் பட்டியலை வெளியிட நீதிமன்ற உத்தரவுகள் எதுவும் தடையாக இல்லை என ஆணையம் பதில் அளித்துள்ளது.எனவே தோ்வானவா்கள் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் என்றாா்.

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன் கூறியதாவது : நீதித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து விட்டதாக அரசு கூறுகிறது. நிதி ஒதுக்கீடு, கட்டடங்கள் கட்டுவது மட்டும் நீதிபரிபாலனத்துக்கு போதுமானது அல்ல. குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் தேக்கத்தை குறைக்க வேண்டும். அதற்கு, அரசு உதவி வழக்குரைஞா் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.