வடகிழக்கு பருவமழை இயல்பை விட 40% குறைவு: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

வடகிழக்கு பருவமழையின் இயல்பு நிலையை விட 40% குறைவாக பெய்திருப்பதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை இயல்பை விட 40% குறைவு: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
வடகிழக்கு பருவமழை இயல்பை விட 40% குறைவு: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தமிழகத்தில் இதுவரை பெய்திருக்கும் மழையானது வடகிழக்கு பருவமழையின் இயல்பு நிலையை விட 40% குறைவாக பெய்திருப்பதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், எடுத்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் இன்று விளக்கினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தமிழ்நாட்டிற்கு, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அதிகப்படியான மழை கிடைக்கப் பெறுகிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய உள்ள இந்த வட கிழக்கு பருவமழைக் காலத்தில், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த பருவமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, மாநிலத்தின் இயல்பான மழை அளவில், 47.32 விழுக்காடு மழை அளவு கிடைக்கப் பெறுகிறது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 28.10.2020 அன்று தொடங்கியது. 28.10.2020 முதல் 16.11.2020 வரையிலான இயல்பான மழையளவு 287.9 மி.மீ. ஆனால் 180.7 மி.மீ. அளவு மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழையளவைவிட 37 சதவீதம் குறைவாகும்.

சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இயல்பான அளவும் 31 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவும் மழை பெய்துள்ளது.

முக்கிய நீர்த்தேக்கங்களின் இன்றைய நீரளவு பின்வருமாறு.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கடந்த கால நிகழ்வுகள் / தரவுகள் அடிப்படையில், மாநிலத்தில் மொத்தம் 4133 பகுதிகள் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன. 
மிகவும் அதிக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் – 321,
அதிக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் – 797,
மிதமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் – 1096,
குறைவாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் – 1919.

முன்னெச்சரிக்கையாக மழை மற்றும் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும் கரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு கூடுதலாக தற்காலிக தங்கும் மையங்களாக பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் என 4680 தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளன.

பாதிப்பிற்குள்ளாகும் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளுக்கு முறையே குறுவட்ட மற்றும் வார்டு அளவில், பாதிப்பின் தன்மை குறித்த ஆய்வு, பேரிடர் காலத்தில் காத்துக் கொள்ள வெளியேறும் வழி மற்றும் நிவாரண மையங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை அளித்திடவும், தேடுதல், மீட்பு, பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வகிக்கவும் 662 பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றிட 43,409 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். இவர்களில் 14,232 மகளிர் என்பது குறிப்பிடத்கக்கது.

இவர்களுடன் கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8,871 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர்.

பேரிடர் காலங்களில் பலத்த காற்றினால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதற்கென 9,909 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர்.
இது மட்டுமின்றி பாம்பு பிடிக்கும் திறன் உள்ளவர்களையும், நீரில் மூழ்குபவர்களையும் காப்பாற்ற நீச்சல் வீரர்கள் கண்டறியது தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்டங்களில் 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 ஜேசிபி இயந்திரங்கள், 2115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 அதிக திறன் கொண்ட பம்புகள், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாது, ஊர்க்காவல் படையினைச் சார்யத 691 நபர்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கீழ் 4,699 தீயணைப்பு வீரர்களும் 9,859 பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 3,094 கல்வி நிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த, 11.09.2020 வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் காணொலி காட்சி மூலம் வட கிழக்கு பருவமழை மற்றும் புயல் / சூறாவளி காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார்.

36 மாவட்டங்களுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக மூத்த இயதிய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை - முன் எச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழக முதல்வரின் அறிவுரைபடி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து 18.09.2020 அன்று தலைமைச்செயலாளர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை செயலர்கள் மற்றும் தொடர்புடைய மத்திய அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

மேலும் 12.10.2020 அன்று தமிழக முதல்வர் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொண்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பெருமக்கள் மற்றும் துறை செயலாளர்களுடன் மற்றும் துறை தலைவர்களுடன் விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

மேலும் 21.10.2020 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொண்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு செய்தார்.

அவசர காலங்களில் தகவல் தொடர்புக்காக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077),  டிஎன்ஸ்மார்ட் செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com