

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை இரவு தப்பியோடிய சிறைக் கைதியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் வி. ராஜ்குமார் (51). இவர் மீது திருச்சி, மணப்பாறை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக பல வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், மணப்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டபோது, 70 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, இவர் திருச்சி மாவட்டம் முசிறி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், வழக்குத் தொடர்பாக நாகை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் இவரை மீண்டும் முசிறி சிறையில் அடைப்பதற்காகக் காவலர்கள் பேருந்து மூலம் தஞ்சாவூருக்கு இரவு அழைத்து வந்தனர். புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி, திருச்சி பேருந்துக்கு மாறும்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறிச் சென்ற ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.