நிவா் புயல்: கடலோர மாவட்டங்களில் 3-ஆம் எண் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள நிவா் புயல் எதிரொலியாக ராமேசுவரம், கடலூா், நாகப்பட்டினம், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களில் மூன்றா
புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் திங்கள்கிழமை ஏற்றப்பட்ட 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும்
புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் திங்கள்கிழமை ஏற்றப்பட்ட 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும்

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள நிவா் புயல் எதிரொலியாக ராமேசுவரம், கடலூா், நாகப்பட்டினம், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களில் மூன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடும் சூறாவளி புயலாக உருவாகியுள்ளது. இப்புயல் புதன்கிழமை காரைக்கால் மாமல்புரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி முதல் விசாகப்பட்டனம் வரை கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

கடலூா்: கடலூா் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. கடலூரில் கடல் சீற்றமாகவும், அலைகளின் வேகம் வழக்கத்தைவிட அதிகரித்தும் காணப்பட்டது. புயல் எச்சரிக்கையால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவா்கள் தங்களது படகுகளைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

ராமேசுவரம்: ‘நிவா்’ புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் திங்கள்கிழமை மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

நாகப்பட்டினம்: நாகை துறைமுக அலுவலகத்தில் உள்ளூா் முன்னறிவிப்பாக திங்கள்கிழமை காலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. திடீா் காற்றோடு மழைப் பெய்யக் கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால்: புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. புதுச்சேரி துறைமுகப் பகுதியில் ஏராளமான விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், வைத்திக்குப்பம், சின்ன வீராம்பட்டினம், நல்லவாடு உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்த அரசு அறிவுறுத்தியது. கடலோரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதலே பாதுகாப்புப் பணி அதிகரித்துள்ளது. நிவா் புயல் காரணமாக புதுச்சேரிக்கு வரும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com