களியக்காவிளை அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 5.5 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை அருகே ரேஷன் அரிசி கடத்தலில் பிடிப்பட்ட லாரி.
களியக்காவிளை அருகே ரேஷன் அரிசி கடத்தலில் பிடிப்பட்ட லாரி.

களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 5.5 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரி ஓட்டுநர், உதவியாளர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

களியக்காவிளை அருகே பளுகல் சோதனைச் சாவடியில் பளுகல்  காவல் நிலைய தலைமை காவலர் வினில், தமிழ்நாடு சிறப்புப் படை காவலர் கமல் ஆகியோர் சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் காய்கனி மூட்டைகளுக்கு அடியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து லாரியில் 50 கிலோ எடை கொண்ட 110 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 5,500 கிலோ ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்ததுடன் திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜு (41), உதவியாளர் பாஸ்கர் (19) இருவரையும் பிடித்து பளுகல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

லாரி ஓட்டுநரிடம் காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் தென்காசி பகுதியிலிருந்து வாங்கிய ரேஷன் அரிசி மீது காய்கனி மூட்டைகளை அடுக்கி வைத்து, கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியில் காய்கனி மூட்டைகளை இறக்கிவிட்டு ரேஷன் அரிசியை பாறசாலை பகுதிக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். 

தொடர்ந்து லாரியில் வைத்திருந்த ரூ. 4,18,610-ம் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.  ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர், உதவியாளரிடம் களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் எழிலரசி விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து ரேஷன் அரிசியையும் லாரி ஓட்டுநர், உதவியாளரையும் நாகர்கோவில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com