வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆர்.பி. உதயகுமார்

சென்னை எழிலகத்தில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆர்.பி. உதயகுமார்
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆர்.பி. உதயகுமார்

சென்னை எழிலகத்தில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை (ஜூன் தொடங்கி செப்டம்பர் முடிய) சராசரியை விட 24 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. ஆண்டு சராசரி மழையளவு 341.9மி.மீ. ஆனால் இந்த வருடம் 424.4மி.மீ மழை பெய்துள்ளது.

இதனால் பெரும்பலான அணைகளில் நீர்மட்டம் சென்ற ஆண்டை விட உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக பவானிசாகர், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெரியாறு, பாபநாசம், பரம்பிக்குளம், ஆழியாறு, பெருஞ்சானி, சோலையாறு, கிருஷ்ணகிரி மற்றும் திருமூர்த்தி அணைகளில் கடந்த ஆண்டை விட நீரின் கொள்ளளவு அதிகமாக உள்ளது.

ஆனால் மேட்டூர், அமராவதி, வைகை, மற்றும் சாத்தனூர் அணைகளில் நீரின் கொள்ளளவு கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. 

இதனைத் தவிர சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் நீர் தேக்கங்களின் கொள்ளளவு இன்றைய தேதியில் கடந்த ஆண்டில் உள்ள கொள்ளளவை விட அதிகமாக உள்ளது. வீராணம் நீர் தேக்கத்தின் கொள்ளளவு மட்டும் குறைவாக உள்ளது.

வடகிழக்கு பருவமழை - 2020
➢ தமிழ்நாட்டிற்கு, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அதிகப்படியான மழை கிடைக்கப் பெறுகிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய உள்ள இந்த வட கிழக்கு பருவமழைக் காலத்தில், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த பருவமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, மாநிலத்தின் இயல்பான மழை அளவில், 47.32 விழுக்காடு மழை அளவு கிடைக்கப் பெறுகிறது. இந்த ஆண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவது சிறிது தாமதமாகிறது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

➢ இருப்பினும் இம்மாதம் 01.10.2020 முதல் 20.10.2020 வரையிலான இயல்பான மழையளவு 105.3 மி.மீ. ஆனால் 72.6மி.மீ. அளவு பெய்துள்ளது. இது 31 சதவீதம் பற்றாக்குறை ஆகும். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
➢ கடந்த கால நிகழ்வுகள் / தரவுகள் அடிப்படையில், மாநிலத்தில் மொத்தம் 4133 பகுதிகள் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன. 

மிகவும் அதிக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் – 321,
அதிக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் – 797,
மிதமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் – 1096,
குறைவாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் – 1919.

பாதிப்பிற்குள்ளாகும் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளுக்கு முறையே குறுவட்ட மற்றும் வார்டு அளவில், பாதிப்பின் தன்மை குறித்த ஆய்வு, பேரிடர் காலத்தில் காத்துக் கொள்ள வெளியேறும் வழி மற்றும் நிவாரண மையங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை அளித்திடவும், தேடுதல், மீட்பு, பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வகிக்கவும் 662 பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர், சட்டமன்ற பேரவையில் விதி எண்.110-ன் கீழ் அறிவித்தபடி, தமிழ்நாடு காவல் படைப்பிரிவு எண்.13-ஐ, 1000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாது, ஊர்க்காவல் படையினைச் சார்ந்த 691 நபர்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கீழ் 4,699 தீயணைப்பு வீரர்களும் 9,859 பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 3,094 கவ்வி நிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றிட 43,409 முதல் நிலை மீட்பாளர்கள்  ஆயத்த நிலையில் உள்ளனர். இவர்களில் 14,232 மகளிர் என்பது குறிப்பிடத்கக்கது.

இவர்களுடன் கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8,871 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர்.

பேரிடர் காலங்களில் பலத்த காற்றினால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதற்கென 9,909 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர்.

இது மட்டுமின்றி பாம்பு பிடிக்கும் திறன் உள்ளவர்களையும், நீரில் மூழ்குபவர்களையும் காப்பாற்ற நீச்சல் வீரர்கள் கண்டறியது தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்டங்களில் 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 ஜேசிபி இயந்திரங்கள், 2115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 அதிக திறன் கொண்ட பம்புகள், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

கடந்த 2015 வெள்ளத்தின் போது தாழ்வான மற்றும் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்கள் தங்க வைக்க 539 தங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் 1,52,088 நபர்கள் தங்க வைக்கப்பட்டனர். தற்போது முன்னெச்சரிக்கையாக மழை மற்றும் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4713 தங்கும் மையங்களில் 7,39,450 நபர்களை தங்க வைக்க தயார் நிலையில் உள்ளன.

மேலும் கரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு கூடுதலாக தற்காலிக தங்கும் மையங்களாக பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் என 4680 தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளன.

பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளாக 6,016 தடுப்பணைகள் கட்டப்பட்டு 11,482 கசிவுநீர் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 7,299 ஆழ்துளை மற்றும் திறந்த வெளி கிணறுகள் நீர் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளன. 4,154 கிலோ மீட்டர் நீளம் ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 9,616 ஏரிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 7,989 ஆக்கிரமிப்புகள் நீர்நிலைகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. 7.53 கோடி கன மீட்டர் வண்டல் மண் அகற்றப்பட்டு, 6,70,864 விவசாயிகள் இதனால் பயன்பெற்றனர்
.
இதனால் 2.55 டிஎம்சி கூடுதல் நீரினை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

11,387 பாலங்கள் மற்றும் 1,09,808 சிறுபாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
2015-ம் ஆண்டு சென்னை நகரில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற நிகழ்வு மீண்டும் ஏற்படாத வண்ணம் தடுக்க நீண்டகால தணிக்கை நடவடிக்கைகளாக ரூ.7 கோடி செலவில் அடையாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேவையான இடங்களில் கால்வாய் அகலப்படுத்தப்பட்டும், நீர்த்தேக்கம் அமைத்தும் தேவையான இடங்களில்கால்வாய் இல்லாத இடங்களில் வெட்டுதல் மற்றம் மூடுதல் முறையில் பெரிய மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு முடியும் நிலையில் உள்ளன.
கடலோர அபாய குறைப்பு திட்டத்தின் மூலமாக பேரிடர் அபாய குறைப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1097.86 கோடியும் நீடித்த மீன்வளத்துறை பணிகளுக்காக ரூ.336.83 கோடியும் பேரிடர் அபாய குறைப்பிற்கான திறன் வளர்ப்பு பணிகளுக்கான ரூ.52.50 கோடியும் மற்றும் திட்ட செயல்பாட்டிற்காக ரூ.73 கோடியும் ஆக மொத்தம் ரூ.1560.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு வழங்கும் வகையில் 488 கடலோர கிராமங்களில் பேரிடரைத் தாங்கக்கூடிய 14,347 வீடுகள் கட்டி 10 வருடத்திற்கான காப்பீட்டு சான்றிதழ்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் மேற்படி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு / மீனவர்களுக்கு பேரிடர் குறித்து விரைவாக தகவல்கள் வழங்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை கருவிகள் மற்றும் பேரிடர் குறித்த அறிவிப்பு கருவி கீழ் ரூ.50 கோடி செலவில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எதிர்வரும் வட கிழக்கு பருவமழை மற்றும் புயல் / சூறாவளி காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அறிவுரைகள் (கால அட்டவணையுடன்) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் 26.08.2020 அன்று அனுப்பப்பட்டுள்ளன.

இடி மற்றும் மின்னல் தாக்கத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை ஆகியவற்றை உள்ளடக்கிய 2020 செயல் திட்டம், 01.09.2020 அன்று அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் 11.09.2020 வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார்.

36 மாவட்டங்களுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள

வடகிழக்கு பருவமழை - முன் எச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழக முதல்வரின் அறிவுரைபடி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து 18.09.2020 அன்று தலைமைச்செயலாளர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை செயலர்கள் மற்றும் தொடர்புடைய மத்திய அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொண்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பெருமக்கள் மற்றும் துறை செயலாளர்களுடன் மற்றும் துறை தலைவர்களுடன் விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

அவசர காலங்களில் தகவல் தொடர்புக்காக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077), டிஎன்ஸ்மார்ட் செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். உடன் வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com