விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

"முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்" ஒன்றை தமிழக அரசு செயல்படுத்தவிருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
Updated On :15 செப்டம்பர் 2020, 9:00 am

DIN

"முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்" ஒன்றை தமிழக அரசு செயல்படுத்தவிருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் பேரவைக் கூட்டத்தில், பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி ஆற்றிய உரையில், தமிழகத்தில் தற்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தங்களுக்கென, தனித்தனியே துறைவாரியான மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன.

மாவட்ட அளவில் திங்கள்கிழமைதோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள், அம்மா திட்ட குறைதீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் போன்றவையும், மாநில அளவில் முதலமைச்சரின் தனிப்பிரிவு, அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வுகள் காணப்படுகின்றன. இதனால், ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை அளிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரே கோரிக்கை மனு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படுவதையும் காண முடிகிறது. எனவே, தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறைதேவைப்படுகிறது. எனவே, பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து, அவற்றிற்குத் தீர்வு காண, ஒரு குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து, “முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்”ஒன்றை அரசு செயல்படுத்த உள்ளது.

இத்திட்டம் முதற்கட்டமாக தகவல் தொழில் நுட்பத் துறையின் மூலம் 12.78 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும். முதற்கட்டமாக 100 இருக்கைகள் கொண்ட உதவி மையமாக செயல்பட இருக்கும் இம்மையம், தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும். குறைதீர்க்கும் முகாம்களிலோ இணைய தளத்திலோ அல்லது அரசு அலுவலர்களோ குறை தீர்க்கும் மனுக்களைப் பெறும்போது வேலைவாய்ப்பு கோரி பெறப்படும் மனுக்களே அதிகமாக உள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு, இந்த மையங்களில் பெறப்படும் அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, தேவைப்படின் மனுதாரர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட்டு, உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பல்வேறு அரசுத்துறைகள் தொடர்பான தனது குறைகளை, மனுதாரர் ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இந்த மனுக்கள் “முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்” மூலம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, விரைந்து தீர்வு காணப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.