ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாஜகவைச் சேர்ந்தவர்!

பாஜகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த அர்ஜுனமூர்த்தி என்பவரையே ரஜினிகாந்த் தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். 
தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் அர்ஜுனமூர்த்தி
தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் அர்ஜுனமூர்த்தி

பாஜகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த அர்ஜுனமூர்த்தி என்பவரையே ரஜினிகாந்த் தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். 

ஜனவரி மாதத்தில் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், அதற்கான தேதி டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் கட்சி மாற்றமும் ஆட்சி மாற்றமும் காலத்தின் கட்டாயம் என்று கூறியதுடன் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதனிடையே தனது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்பவரை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அறிமுகப்படுத்தி 'இவர் கிடைத்தது என் பாக்கியம்' என்றும் கூறினார். 

இவரது பின்னணி பற்றி பார்த்தால் ரா. அர்ஜுனமூர்த்தி பாஜகவின் முக்கிய நிர்வாகி. வியாழக்கிழமை பிற்பகல் வரை பாஜகவின் தமிழக அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவராக இருந்தார். பாஜக தேசியத் தலைவர்களுடன் நெருக்கமானவர். தமிழகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த வேல் யாத்திரையில் இவரது பங்கு முக்கியமானது என்று கூறப்படுகிறது. 

வேல் யாத்திரை குறித்த திட்டத்தினை இவர்தான் வகுத்ததாக சொல்லப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடம் வேல் எடுத்துக்கொடுத்து யாத்திரையை தொடங்கி வைத்தது அர்ஜுனமூர்த்தி. மேலும், பழனியில் நடைபெற்ற வேல் யாத்திரையில் கலந்துகொண்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தபோது நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். 

முன்னதாக பாஜகவின் வர்த்தகப்பிரிவில் பணியாற்றிய இவர் ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர கொள்கையாளர் என்பதும் கூடுதல் தகவல். 

ரஜினி கட்சியில் இணைந்துள்ள அர்ஜுனமூர்த்தி சற்றுமுன் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அர்ஜுனமூர்த்தி தனது ட்விட்டர் பக்க முகப்பில், 'நவ் வித் தலைவர்' என்று மாற்றியுள்ளதோடு, 'தலைவருக்கு என் அனேக கோடி வணக்கங்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என ரஜினியுடனான தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.  

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் குறித்து தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ள ரஜினி, தற்போது கட்சியின் உச்சபட்ச பொறுப்பான தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை பாஜக நிர்வாகி ஒருவருக்கு வழங்கியிருப்பது அரசியல் சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அதேநேரத்தில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com