
ஸ்டாலின்
தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கு (என்.பி.ஆர்) எதிராக தமிழகத்தில் மக்களைத் திரட்டி, காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,
'1. என்.பி.ஆருக்கு எதிராக தமிழ்நாட்டில் மக்களைத் திரட்டி, காந்திய வழியில், ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்!
2. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திடுக!
3. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்யும் வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்றிடுக!'
என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மூன்று தீர்மானங்கள் குறித்து திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீர்மானம் : 1
என்.பி.ஆருக்கு எதிராக தமிழ்நாட்டில் மக்களைத் திரட்டி, காந்திய வழியில், ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்!
அரசியல் சட்டத்தையும், நாட்டின் பன்முகத் தன்மையையும் பாதுகாத்திடும் பொருட்டு - சிறுபான்மையின மக்கள், இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் நோக்கில், தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெறும் அறவழிப் போராட்டங்கள், மத்திய பா.ஜ.க. அரசையும்- பிற்போக்கான இந்த சட்டத்திற்கு ஆதரவளித்து வாக்களித்த அதிமுக, பா.ம.க. போன்ற கட்சிகளையும் பெரிதும் மிரள வைத்துள்ளது.
ஜனநாயக வழியில் அமைதியாக நடக்கும் போராட்டத்தைக் காணச் சகிக்காத அதிமுக அரசு - வெகு மக்களுக்கு எதிராகக் காவல்துறையை ஏவி விட்டு - சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் தடியடி நடத்தியிருப்பதற்கு, இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
சட்டமன்றத்தில் இன்று (17.2.2020) இது தொடர்பாகப் பிரச்சினை எழுப்பி, குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்த நியாயமான கோரிக்கையை சர்வாதிகாரத்தனத்துடன் ஏற்க மறுத்ததோடு, குடியுரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திப் பேசிய முதல்வர் பழனிச்சாமிக்கு இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
குடியுரிமைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களும், காவல் துறையில் சிலரும் இந்த அடிதடியில் காயம்பட்டிருப்பதற்கு அதிமுக அரசின் திட்டமிட்ட தூண்டுதலே காரணம் என்று பதிவு செய்யும் இக்கூட்டம் - காயம்பட்டவர்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு - விரைந்து முழுமையான குணமடைய வேண்டும் என்று விரும்புகிறது.
அதேநேரத்தில், அ.தி.மு.க. அரசு தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுக்கு மதிப்பளிக்காமல் - என்.ஆர்.சிக்கு வழி திறக்கும் என்.பி.ஆரை தமிழகத்தில் நடத்தத் தன்னிச்சையாக அனுமதித்தால், அனைத்துக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து, என்.பி.ஆருக்கு எதிராக மக்களைத் திரட்டி, அறிஞர் அண்ணா காட்டிய காந்திய அற வழியில், மகத்தான ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை, திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்றும் இந்தக் கூட்டம் எச்சரிக்கை செய்ய விரும்புகிறது.
தீர்மானம் : 2
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திடுக!
“மூன்றாண்டு சாதனை” என்று நீட்டி முழங்கிக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் நிகழ்ந்துள்ள அரசுப் பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளும், நியமனங்களும் ஊழலுக்குப் புதியதொரு வரலாறு எழுதிட வித்திட்டுள்ளது என்பதற்கும்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மாபெரும் மோசடி நடைபெற்று - தேர்வுகளின் மீதான நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை அதிமுக ஆட்சியில் நசுக்கப்பட்டிருப்பதற்கும்; கழக மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
“க்ரூப்-4 தேர்வில் முதலில் வந்த 100 பேருக்குள் ஒரேமையத்தில் எழுதிய 40 பேர் மாநில அளவில் தேர்வானது” கடுமையாக உழைத்த இளைஞர்களுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்து - திமுக தலைவர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இன்றைக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை மூலம், 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றாலும், அயிரை மீன்கள்தான் பிடிபட்டுள்ளதே தவிர - தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட முதலைகள் இதுவரை பிடிபடவில்லை.
ஒரு ரிக்கார்டு கிளார்க், வேன் டிரைவர் உள்ளிட்டோர், “பெரிய இடத்து” அனுசரணையும் ஆதரவுமின்றி இவ்வளவு பெரிய முறைகேட்டைச் செய்திருப்பார்கள் என்பது, அதீத கற்பனைக் காட்சிகள் போல் இருக்கிறதே தவிர - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வெளிப்படைத் தன்மையின் அஸ்திவாரமே ஆடிப் போய் நிற்கிறது என்பதே உண்மை.
2016 மற்றும் 2017ல் நடைபெற்ற க்ரூப்-2ஏ தேர்வுகள், கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகள் எல்லாமே முறைகேடுகளால் வீசும் முடை நாற்றத்தில் சிக்கி, அதிமுக ஆட்சியில் அழுகல் நாற்றம் பெருகி வீசிக்கொண்டிருக்கிறது. இது தவிர மோட்டார் வாகன ஆய்வாளர் பதவித் தேர்வுகள், கட்டிடக்கலை இளநிலைப் பொறியாளர் பதவிக்கான தேர்வுகள் எல்லாவற்றிலும் சர்ச்சைகளும் சந்தேகங்களும் கொடிகட்டிப் பறந்துள்ளன.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றிற்கான 8888 பதவிகளை நிரப்புவதற்கான தேர்வில் பங்கேற்றவர்களில் 10 சதவீத விளையாட்டு சிறப்புக் கோட்டாவில் சேருவதற்கு சான்றிதழ் கொடுத்தவர்களில் 1000 பேருடைய சான்றிதழ் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“2016ல்- க்ரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேரில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து 64 பேர் வெற்றி பெற்றதும்” “இந்த மெகா ஊழல் குறித்து உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் விசாரணையில் மூன்று விசாரணை அதிகாரிகளை மாற்றி வழக்கை பிசுபிசுக்க வைத்ததையும்”, இந்தக் கூட்டம் கடுமையாகக் கண்டிக்கிறது.
ஆகவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் - குறிப்பாக 2016 முதல் இன்றுவரை நிகழ்ந்துள்ள பணி நியமன முறைகேடுகளை உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரித்திட வேண்டும் என்று கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 3
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்யும் வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்றிடுக!
“காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பேன்” என்று சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்காதீர்கள்” என்று, மத்திய பா.ஜ.க. அரசுக்கு ரகசியமாகக் கடிதம் எழுதி, கடந்த காலத்தை மறைத்து எதிர்காலத்தை நினைத்து, மண்டியிட்டுக் கெஞ்சி நிற்பதற்கு, மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
“இன்று மாலைக்குள் கடிதத்தை வெளியிடவில்லை என்றால் அதை நானே வெளியிடுவேன்” என்று திமுக தலைவர் விடுத்த கடும் எச்சரிக்கையினைத் தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அந்தக் கடிதத்தில் உள்ள கோரிக்கை, “ஏற்கனவே விவசாயப் பெருமக்கள் கடுமையாக எதிர்த்துப் பல மாதங்களாகப் போராடும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்வது குறித்து, மத்திய அரசிடம் எதையும் கேட்கவில்லை” என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது; அது மறைத்து வைக்கப்பட்டிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்தது போலாகியிருக்கிறது.
முதல்வரின் கடிதத்தில் உள்ள கோரிக்கை, அரை குறையானது. நீட் தேர்வு வேண்டாம், உதய் திட்டம் வேண்டாம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் வேண்டாம் என்றெல்லாம் கடிதம் எழுதி விட்டு- பதவியில் நீடிக்க மத்திய பாஜகவின் “அனுக்கிரகம் “ அவசியம் என எண்ணி,எப்படி மாநிலத்தின் உரிமைகளை, ஒவ்வொன்றாகத் தாரை வார்த்து - மத்திய அரசின் திட்டங்களையெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிறைவேற்றியிருக்கிறதோ, அதேபோல், இப்போது பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல வாக்குறுதியிலும் - பரிதவிப்புகளுக்கு ஆளாகியிருக்கும் தமிழக விவசாயிகளை ஒட்டு மொத்தமாக ஏமாற்றி, ஒரு கபட நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
திமுகவைப் பொறுத்தவரை, “அதிமுக அரசும்- பா.ஜ.க. அரசும்”, காவிரி டெல்டா பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருக்கும் நூற்றுக் கணக்கான ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்து விட்டு - “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல” சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அப்படிச் செய்தால்தான், அது பொருத்தமாகவும், பொருள் உள்ளதாகவும், வேளாண்மை வளர்ச்சிக்குப் பயனுள்ளதாகவும், விவசாயிகளுக்கு நிம்மதி தருவதாகவும், இருக்கும் என்று திமுகழகம் கருதுகிறது.
ஆகவே பழையனவற்றை ரத்து செய்துவிட்டு , புதியன புகுந்து விடாமல் கதவை இறுகச் சாத்திவிட்டு, “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல” அறிவிப்பிற்கான சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.