
நெல்லை கண்ணன்.
பிரதமர் குறித்து அவதூறாக பேசிய நெல்லை கண்ணன் மீது மேலும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நடைபெற்ற இந்தியக் குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பிரதமா் மோடி, உள்றை அமைச்சா் அமித்ஷா குறித்து நெல்லை கண்ணன் அவதூறாக பேசியதாக பாஜகவினர் தரப்பில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன.
இதற்கிடையே, உடல்நிலை சரியில்லாததால் திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டிருந்தாா். தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது
தொடர்ந்து, நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மெரினாவில் பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். இதனபின்னர், நெல்லை கண்ணன் நேற்று பெரம்பலூரில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே நெல்லை கண்ணன் மீது குற்றம் செய்யத் தூண்டுதல், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட3 பிரிவுகளின் கீழ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட 311 பேர் மீது போலீஸார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.