
திருவள்ளூர் அருகே பா.ஜ.க பிரமுகர் வீட்டில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 400 சவரன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன். இவர் பா.ஜ.கவில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவரது தம்பி ஆர்.எம்.ஆர்.ரமேஷ் மகள் திருமணம் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருக்கு திருமண அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக சென்றுள்ளார்கள்.
இதற்கிடையே அவரது உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து திருமணத்திற்காக வந்து தங்கியிருந்து மற்ற உறவினர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அழைப்பிதழ் கொடுக்கும் பணியை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, வீட்டின் கேட் மற்றும் கதவு பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்து 400 சவரன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக ஜானகிராமன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு பொன்னேரி பகுதி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் மற்றும் போலீஸார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.