Enable Javscript for better performance
குற்றச்செயல்களின் புகலிடமாகிறதா வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் கோட்டை?- Dinamani

சுடச்சுட

  

  குற்றச் செயல்களின் கூடாரமா வேலூர்க் கோட்டை?

  By என்.தமிழ்ச்செல்வன்  |   Published on : 20th January 2020 04:58 PM  |   அ+அ அ-   |    |  

  WhatsApp_Image_2020-01-20_at_4


  வேலூர்: வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் நகை பறிப்பு, வழிப்பறி, காதலர்களின் அத்துமீறல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 

  தொடரும் இத்தகைய பாதிப்புகளைத் தடுக்க மத்திய தொல்லியல் துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை இணைந்து விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

  இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் நாயக்கர் மன்னரான குச்சிபொம்மு நாயக்கரால் கட்டப்பட்ட இக்கோட்டையில் தான் 1806-ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி நடந்த புரட்சியில் இந்திய சிப்பாய்களால் முதன்முதலாக பல ஆங்கிலேய அதிகாரிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் நபர்களும் கொல்லப்பட்டனர்.

  அத்தகைய சிறப்பு வாய்ந்த வேலூர் கோட்டையில் தற்போது ஜலகண்டேஸ்வரர் கோயில், மத்திய, மாநில அரசுகளின் அருங்காட்சியகம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தேவாலயம், மசூதி, பழங்கால ஆயுதக் கிடங்குகள், திப்பு சுல்தான், இலங்கையின் கண்டி பகுதியை ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர் விக்கிரராஜசிங்கன் ஆகியோர் குடும்பத்துடன் சிறை வைக்கப்பட்டிருந்த இடங்களும் அமைந்துள்ளன. 

  மேலும் படிக்க.. வேலூா் கோட்டையில் பெண் பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

  தவிர, கோட்டையைச் சுற்றி 191 அகலமும், 29 அடி ஆழமும் உடைய எப்போதும் தண்ணீர் வற்றாத அகழியும் அமைந்துள்ளது.  மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோட்டையை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

  எனினும், உரிய பராமரிப்பு இல்லாததால் வேலூர் கோட்டையின் மதில் சுவர்களிலும், கோட்டைக்கு முன்பாக உள்ள பூங்காவிலும் காதலர்கள் அமர்ந்து கொண்டு அநாகரீக செயல்பாடுகளில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இது வெளி மாவட்ட, மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைப்பதாக அமைந்துள்ளது. இதுதவிர, நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரிக்கும் வகையில் போதை நபர்களின் நடமாட்டமும் வேலூர் கோட்டையில் அதிகளவில் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கோட்டையைச் சுற்றிப்பார்க்க அச்சமடைந்து வருகின்றனர்.

  இத்தகைய சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகளை தடுக்க வேலூர் கோட்டையைச் சுற்றி பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது. எனினும், சில முக்கிய நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பாதுகாப்புப் பணிகள் பெயரளவிலேயே இருந்து வருகிறது.

  இந்நிலையில், வேலூர் நகரிலுள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வரும் 24 வயது பெண், தனது காதலனுடன் வேலூர் கோட்டை பூங்காவில் சனிக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் காதலனைத் தாக்கிவிட்டு கத்தி முனையில் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்தப் பெண் அணிந்திருந்த கம்மலையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

  பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தற்போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வேலூர் வடக்கு போலீஸார், வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த அஜித்(19), சக்திநாதன்(19) ஆகியோரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்பவரை தேடி வருகின்றனர்.

  நகரின் மையப்பகுதியில், காவல் நிலையங்களுக்கு மிக அருகே உள்ள வேலூர் கோட்டையில் நடந்துள்ள இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் கோட்டை, குற்றச்செயல்களின் புகலிடமாக மாறி வருவதைத் தடுக்க மத்திய தொல்லியல் துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை இணைந்து விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

  TAGS
  vellore
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai