ஜூலை மாதத்துக்கும் இலவச ரேஷன் பொருள்கள்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Updated on
2 min read

தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரசி உள்ளிட்டவை ஜூலை மாதத்துக்கும் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ஜூலை 6 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை அவரவர் வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும். ஜூலை 10 ஆம் தேதி முதல் தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைகளில் சென்று பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

கரோனா பொதுமுடக்க காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் 3,280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு நிவாரண திட்டத்தை அரசு அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்க உதவித் தொகையுடன் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன.

இது தவிர, ஊரடங்கு தொடர்ந்த காரணத்தினால், மே மற்றும் ஜுன் மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான அளவு அரிசியும், சர்க்கரையும் ஏப்ரல் மாதத்தில் வழங்கியதைப் போன்றே விலையில்லாமல் வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ வீதம், ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க மத்திய அரசால் உத்தரவிடப்பட்டது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினை பொறுத்து, கூடுதலான அரிசியும், இந்த 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போது ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு  லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின் படி, கூடுதல் அரிசியுடன் நியாய விலைக் கடைகளில், விலையின்றி வழங்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது.

நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகின்ற 6.7.2020 முதல் 9.7.2020 வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும்.

அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் 10.7.2020 முதல் சென்று அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

தடைசெய்யபட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். பொது மக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com