
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,
மின் கட்டணம் குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் தெரிவித்த நிலையிலும், திமுக தேவையின்றி இன்று போராட்டம் நடத்தி வருகிறது. மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே திமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழகம் முழுவதும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில், 10% -க்கும் குறைவாகவே பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.
மேலும், தமிழகத்தில் குறைந்த விலையில் தரமான முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும்' என்றார்.